சமீபத்தில் வெளியான ஐபோன் 12 சீரிஸ், ஆப்பிளின் ஐபோன் வரிசையில் 5G கனெக்ட்டிவிட்டி கொண்ட ஸ்மார்ட்போன்களாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 5G தொழிநுட்ப சேவையை மக்கள் தற்போது பயன்படுத்தி வருவதால் அதன் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு வரவிருக்கும் ஐபோன் நிச்சயமாக மேம்பட்ட திறன்களுடன் 5G அம்சத்தைக் கொண்டிருக்கும் என்றும் நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது.


இந்த நிலையில் விரைவில் வெளியாகவுள்ள ​​ஆப்பிள் iPhone 13-இல் ஒரு புதிய செல்லுலார் ரேடியோ தொழில்நுட்பத்தை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வாளர் மிங்-சி குவோவின் கூற்றுப்படி, iPhone 13 சீரிஸ் லோ-எர்த்-ஆர்பிட் (LEO) செயற்கைக்கோள் தொடர்பு அம்சத்துடன் வரலாம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் நெட்வொர்க் சிக்னல்கள் மிக வீக்காக உள்ள பகுதியில் வாய்ஸ் கால்கள் மேற்கொள்ளவும் மற்றும் எஸ்எம்எஸ்-களை அனுப்ப முடியும். அதாவது நெட்வொர்க் இல்லாத போதும் இதை செய்யலாம்.



முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய குவோ, LEO தொழில்நுட்பம் செல்லுலார் இணைப்பை ஐபோன்கள் எவ்வாறு கையாளுகின்றன என்பதற்கு ஒரு பெரிய மேம்படுத்தலாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். அதாவது இந்த தொழில்நுட்பத்தில் மொபைல் சாதனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான தகவல்தொடர்புகளை உருவாக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் உங்கள் ஐபோன் நிலையான 4G அல்லது 5G நெட்வொர்க் வரம்பிற்கு வெளியே இருந்தாலும் கூட தகவல்தொடர்பு செயல்முறையை தொடங்கலாம்.


கடந்த 2019ம் ஆண்டில், வேகமான தரவு பரிமாற்றத்திற்கு, ஆப்பிள் ஐபோனில் LEO செயற்கைக்கோள் தகவல் தொடர்பு முறையை பயன்படுத்தக்கூடும் என்று முதன்முதலில் அறிக்கை வெளியிட்டிருந்தது. அறிக்கைக்கு பிறகு, ஐபோனில் இந்த அம்சம் செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும். ஐபோன் 13-சீரிஸில் மட்டுமல்ல, ஆப்பிள் நிறுவனம் இந்த LEO தொழில்நுட்பத்தை AR ஹெட்செட், ஆப்பிள் கார் மற்றும் பிற இன்டர்நெட் தயாரிப்புகளிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற வதந்திகளும் வெளிவந்துள்ளன.


ஐபோனில் உள்ள "குவால்காம் X60 பேஸ்பேண்ட் மோடம் சிப்" காரணமாக LEO செயற்கைக்கோள் தொடர்பு அம்சம் சாத்தியமாகும் என்றும் இது செயற்கைக்கோள் வழியாக ஒருவித தனிப்பயனாக்கம் மூலம் தொடர்பு கொள்ள உதவும். LEO மோட் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்களை பரிமாறிக்கொள்ள அனுமதிக்கிறது. இருப்பினும், இந்த இரண்டு அம்சங்களும் ஆப்பிள் சேவைகளான iMessage மற்றும் FaceTime உடன் வேலை செய்யுமா? அல்லது ஆப்பிள் ப்ராக்ஸி செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளை வழக்கமான நெட்வொர்க் கோபுரங்களில் பயன்படுத்தி, எந்த ஒரு சாதனத்திற்கும் தகவலை பரிமாறுமா? என்பது இப்போது தெளிவாகத் தெரியவில்லை.



இது அவசரநிலைக்கான ஒரு அம்சமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவைக்காக ஆப்பிள் தனது யூசர்களிடம் கட்டணம் வசூலிக்குமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. ஐபோன் 13 ஸ்மார்ட்போன் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இவை ஐபோன் 12 எஸ் என்றும் அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஐபோன் 13 அதன் ஓஎல்இடி டிஸ்ப்ளேவில் சிறிய அளவில் வருவதாக தகவல்களும் கசிந்துள்ளது. ஐபோன் 12 போல 13 சீரிஸும் நான்கு மாடல்களில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.


அதாவது, iPhone 13 mini, iPhone 13, iPhone 13 Pro, மற்றும் iPhone 13 Pro Max ஆகியவை ஆகும். ப்ரோ மாடல்கள் 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்ப்ளேக்களுடன் வரலாம். ஆப்பிள் நிறுவனத்திற்காக இதனை சாம்சங் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. ஐபோன் 13-இல் உள்ள கேமராக்கள் படத்தின் தரத்திற்கு அதிக அம்சங்களையும் மேம்பாடுகளையும் கொண்டு வரலாம். இருப்பினும் இந்த மாற்றங்கள் அவ்வளவு பெரியதாக இருக்காது. ஐபோன் 13 ஆப்பிள் A15 பயோனிக் செயலியுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.