தமிழ்நாட்டில் சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். கொள்ளைகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், வங்கி கணக்குகள் பயன்படுத்துவருக்கு கடும் பீதியை ஏற்படுத்தியது. பின்னர், இந்த வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையர்கள் 4 பேரை ஹரியானாவில் தமிழக போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையங்கள் கொள்ளை வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி தமிழக உள்துறைக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. சென்னை காவல்துறையின் பரிந்துரை கடிதத்தை தமிழக உள்துறை விரைவில் மாநில அரசுக்கு அனுப்ப உள்ளது.
முன்னதாக, சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையங்களில் டெபாசிட் இயந்திரங்களில் பணங்கள் டெபாசிட் செய்யப்படுவதாக காட்டுவதும், ஆனால், பணம் இயந்திரத்தில் இல்லாததையும் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது. விசாரணையில் வேளச்சேரி, தரமணி, வடபழனி, அடையாறு, வளசரவாக்கம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இந்த தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
விசாரணையில், மர்மகும்பல் ஒன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளில் உள்ள டெபாசிட் இயந்திரங்களை மட்டுமே குறிவைத்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் விசாரணையைத் தீவிரப்படுத்த போலீசார் டெபாசிட் இயந்திரங்களில் உள்ள சென்சார் இயந்திரங்கள் சோதனை செய்ய எடுத்துக்கொள்ளும் 20 விநாடி இடைவெளிகளை பயன்படுத்தி ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளை கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
பின்னர், சென்னை காவல் துணை ஆணையர் தலைமையில் ஹரியானா விரைந்த தனிப்படை அமீர், வீரேந்தர், சவுகத் அலி ஆகிய 4 பேரை கைது செய்தனர். அந்த கும்பலின் தலைவன் சவுகத் அலி என்பதும் அவர்கள் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது.
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓ.கே.ஐ. நிறுவனத்தின் டெபாசிட் இயந்திரத்தை மட்டும் குறிவைத்து கொள்ளையடித்த இந்த கும்பல் சுமார் 1 கோடி வரை தமிழ்நாட்டில் கொள்ளையடித்த அதிர்ச்சி தகவலும் வெளியானது. சென்னையில் கொள்ளையடிப்பதற்கு முன்பு வேப்பேரி, வடபழனி, தி.நகர் போன்ற பகுதிகளில் லாட்ஜ்களில் தங்கி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களது கொள்ளைச் சம்பவங்களை இந்த கும்பல் அரங்கேற்றியுள்ளது.
சூளைமேட்டில் உள்்ள ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தில் மட்டும் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூபாய் 16 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். இந்த கும்பல் தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களிலும் தங்களது கைவரிசையை காட்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்கள் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை சில சமயங்களில் குருவிகளாக செயல்படுவபர்களிடம் கொடுத்துவிட்டு, விமானங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுகின்றனர். சில சமயங்களில் கொள்ளையடித்த பணத்தை கார் மூலமாகவே தங்களது சொந்த மாநிலத்திற்கும் கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தற்போது, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரைத்ததன் மூலம் தேசியளவில் இந்த கும்பல் நடத்திய கொள்ளை சம்பவங்கள் வெளியில் வர வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.