சமூக வலைத்தளங்களின் தனக்கென தனி இடத்தை தக்க வைத்திருக்கும் செயலி ‘ இன்ஸ்டாகிராம்”. இந்த நிறுவனம் அவ்வபோது தனது பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அப்படி டிக்டாக்கிற்கு போட்டியாக களமிறங்கிய வசதிதான் ‘ரீல்ஸ்’. இன்று பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பயன்படுத்தி வருகின்றனர்.   அந்த வகையில் தற்போது தனது பயனாளர்களுக்குன் புதிய ரீல்ஸ் அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் 30 வினாடிகள் மட்டுமே செய்ய முடிந்த ரீல்ஸ் வீடியோவின் , கால அளவை  1 நிமிடம் (60 வினாடிகள்) வரையில் நீட்டித்துள்ளது. ஏற்கனவே 15 வினாடிகள் மற்றும் 30 வினாடிகளில்  ரீல்ஸ் வீடியோக்களை செய்ய வழிவகை செய்துள்ளது. இதனை இன்ஸ்டாகிராமை அப்டேட் செய்வதன் மூலம் பயனாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஒரு நிமிடத்திற்கு மேலானா வீடியோக்களை போஸ்ட் செய்வதற்கான வசதியாக ஐஜிடிவி வசதியை பயன்படுத்தி போஸ்ட் செய்துக்கொள்ளலாம். ஐஜிடிவி மூலம் பணம் ஈட்டுவதற்கான வசதிகளை  இன்ஸ்டாகிராம் திட்டமிடுதலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் டீனேஜ் பயனாளர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ரீல்ஸ் வீடியோக்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் அவர்களை குறி வைத்தே இன்ஸ்டாகிராம் இந்த புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. 






முன்னதாக டிக்டாக் 3 நிமிடங்கள் வரையில் வீடியோக்கள் செய்வதற்கான வாய்ப்பை அதன் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது (இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு அனுமதி இல்லை). அதற்கு போட்டியாகவும்  இந்த 60 வினாடிகள் ரீல்ஸ் நீட்டிப்பை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருக்கும் நண்பர்கள் இடும்  ஸ்டோரி பதிவுகளை  ஆங்கிலம் உள்ளிட்ட குறிப்பிட்ட  மொழிகளில் மொழி மாற்றம் செய்துக்கொள்வதற்கான வசதிகளை அறிமுகப்படுத்தியிருந்தது இன்ஸ்டாகிராம். கிட்டத்தட்ட 90 மொழிகளில் டிராஸ்லேட் வசதியை அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஸ்டோரி அல்லது போஸ்டின்  வலது புறத்தில் இதற்கான வசதிகள் கொடுக்கப்படிருக்கும். இதன் மூலம் மொழி வேறுபாடின்றி அனைவருக்குமான பிணைப்பை ஏற்படுத்தும் தளமாக இன்ஸ்டாகிராம் இருக்கும் என தெரிவித்தது அந்த நிறுவனம். 




இன்ஸ்டாகிராம் கடந்த 2016 ஆம் ஆண்டு  இதே போல  கமெண்டுகள், கேப்சன் போன்றவற்றிற்கான மொழிப்பெயர்ப்பு அம்சத்தை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் ‘லிமிட்ஸ்’ என்ற வசதி பயனாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.  இதன் மூலம் தேவையற்ற கருத்துகளை பரப்புபவர்கள் மற்றும் தவறான கருத்துகளை பதிவிடும் நபர்களை  பயனாளர்கள் கட்டுப்படுத்தலாம். இது தவிர தவறான வகையில் கருத்துகளை பதிவிடும் நம்பரின் கமெண்டுகளை தன்னிச்சையாக நீக்குவதற்கான சோதனை முயற்சியிலும் இன்ஸ்டாகிராம் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.