செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் விபத்திற்கு உள்ளானதில் அவருடன் வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த பவனி என்ற பெண் தோழி சம்பவ இடத்திலேயே பலியானார். யாஷிகா மற்றும் உடன் வந்த சையது, அமீர் ஆகிய இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன்  சிகிச்சை பெற்று வருகின்றனர். பாண்டிச்சேரியில் பார்டி ஒன்றில் பங்கேற்று விட்டு தனது நண்பர்களுடன் சென்னை  கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னை நோக்கி சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. 


விபத்து காரணம் இது தான்!


காரை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சூளேரிக்காடு பகுதியில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள விபத்து முதலுதவி சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.


இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தற்போது சென்னை அடையாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நடிகை யாஷிகாவிற்கு இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்து உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மகாபலிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


சம்பவம் குறித்து யாஷிகாவிடம், மகாபலிபுரம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றதாகவும்,  அதில்,யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்தபோது , திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால், விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவனி சீட்பெல்ட் அணியாததால், காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், மேலும் விபத்து நடந்த பிறகு ரத்தவெள்ளத்தில் இருந்த நண்பர்களை காப்பாற்ற கூச்சல் விட்டதாகவும் அவருடைய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்ததாக’ போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி யாஷிகா உள்ளிட்ட யாரும் குடிபோதையில் இல்லை என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர். யாஷிகா ஆனந்த் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் யாஷிகாவின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 279, 337, 304 A,  அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தும் வண்ணம் காரை ஓட்டியது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 




முரண்பாடான தகவல்கள்


விபத்து நடந்த சம்பவத்தில் இருந்தவர்கள், விபத்திற்கு உள்ளானவர்களை மீட்டவர்கள் தரப்பில் கூறப்பட்ட தகவலுக்கும், போலீசார் கூறும் தகவலும் முற்றிலும் மாறுபட்ட தகவலாக உள்ளது. போலீஸ் தரப்பில் யாஷிகா மது அருந்தவில்லை என்கின்றனர் போலீசார். ஆனால் மீட்டவர்கள், ‛யாஷிகா உள்ளிட்டோர் நல்ல போதையில் இருந்ததாகவும், அவர்களது காரில் நிறைய மது பாட்டில்கள் இருந்ததாகவும்,’ கூறியுள்ளனர். அடிப்படையிலேயே யாஷிகாவை காப்பாற்ற வேண்டும் என்பதில் துவக்கத்தில் இருந்தே போலீசார் இந்த விவகாரத்தை கையாண்டு வருவதாகவே தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பான அனைத்தையும் ரகசியம் காக்க அவர்கள் காட்டும் முனைப்பும், ஆர்வமும் அதனுடைய வெளிப்படே. 


முதல் தகவல் அறிக்கையை கூட பதிவேற்ற தயக்கம்!


பொதுவாக ஒவ்வொரு காவல்நிலையத்தில் பதியப்படும் வழக்குகள், மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாளில் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு காவல்துறையின் இணையத்தில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் யாஷிகா வழக்கை பொறுத்தை வரை இதுவரை அவரது முதல் தகவல் அறிக்கை பதிவேற்றம் செய்யப்படவில்லை. இத்தனைக்கும் ஒருவர் உயிரிழந்த வழக்கு. யாஷிகாவின் வழக்குக்கு முந்தைய வழக்குகள், அவருக்கு பின் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கூட பதிவேற்றம் செய்த போலீசார், யாஷிகா வழக்கை பதிவு செய்யவில்லை. யாஷிகாவின் வழக்கு எண் 466/2021. இதுவரை வழக்கு எண் 469 வரை பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாஷிகாவின் 466ம் எண் வழக்கு மட்டும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இது தொடர்பாக மாமல்லபுரம் போலீசாரை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‛சில சிறிய வழக்குகளை பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை,’ என்றனர். யாஷிகா வழக்கோடு ஒப்பிடும் போது பதிவேற்றம் செய்யப்பட்டு மற்ற வழக்குகள் மிகச்சிறியவையே. ஆனால் தமிழ்நாடே பேசிக்கொண்டிருக்கும் ஒரு வழக்கை, போலீசார் சிறிய வழக்கு என்று சொல்லும் போது, அதில் சந்தேகம் வலுக்கிறது. துவக்கத்திலிருந்தே ஆஷிகா தரப்பிற்கு ஆதரவாக போலீசார் செயல்படுகிறார்களோ என்கிற சந்தேகம் இருந்து வந்த நிலையில், இந்த சம்பவம் அதை உறுதி செய்கிறது. சாமானியர்களுக்கு ஒரு நியாயத்தையும், பிரபலங்களுக்கு ஒரு நியாயத்தையும் போலீசார் கடைபிடிப்பது புதிதல்ல என்றாலும், நேர்மையான அதிகாரிகள் பொறுப்பேற்ற பிறகும் அது தொடர்வது தான் வேதனையானது.