சமூகவலைதளங்களில் படங்களை பகிர்வதற்கு ஃபேஸ்புக் தளத்திற்கு அடுத்து மிகவும் முக்கியமான தளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இந்த தளத்தில் பிரபலங்கள், பொது மக்கள் என அனைவரும் தங்களுடைய படங்களை பதிவிட்டு நண்பர்களிடம் இருந்து லைக்ஸ் பெற்று வருகின்றனர். அத்துடன் டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டா ரீல்ஸ்தான் பயனர்களிடம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் அவ்வப்போது இன்ஸ்டா செயலியில் ஒரு சில புதிய வசதிகளை அந்நிறுவனம் கொண்டு வந்து பயனர்களுக்கு சர்ப்ரைஸ் தருகிறது.
அந்த வரிசையில், சமீபத்தில் வெளியான செய்தியில் யூட்யூப் சேனலில் உள்ள சப்ஸ்கிர்ப்ஷன் ஆப்ஷனைப் போல இனி இன்ஸ்டாகிராமிலும், சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷன் வர உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதற்கான சோதனை முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து, ’லைவ்’ ஸ்ட்ரீம் எனப்படும் நேரலை செய்வதற்கான வசதியில் லைவ் செய்ய இருக்கும் அக்கவுண்டில் இருந்து முன்கூட்டிய அதற்கான நோட்டிஃபிகேஷன் அனுப்பும் வகையில் ஒரு அப்டேட் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் தற்போது இருக்கும் ஆப்ஷனில், ஒருவர் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்போகிறார் என்றால், அவர் நேரலையை தொடங்கிய பின்பு அவரை ஃபாலோ செய்பவர்களுக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், இனி வரும் அப்டேட்டின்படி, நேரலையை தொடங்குவதற்கு முன்பே, நேரலை குறித்த தகவல்களை ஃபாலோவர்ஸிடம் பகிரும் வசதி வர உள்ளது.
இதனால், சேனலை நடத்துபவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட லைவ் ஸ்ட்ரீம் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் தயார் செய்யலாம். அதற்கான விவரங்களை ஃபாலோவர்ஸூடன் பகிரலாம். மேலும், ஃபாலோவர்ஸ் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியை, பார்க்க நினைக்கும் நிகழ்ச்சிகளை மட்டும் புக் மார்க் செய்து பின்பற்றலாம். கிட்டதட்ட யூட்யூபில் உள்ள வசதிகள் இன்ஸ்டாகிராமுக்கு படையெடுக்கின்றன. ஒவ்வொன்றாய் அப்டேட் செய்து வரும் அந்நிறுவனம், இன்னும் சுவாரஸ்யமான அப்டேட்டுகளை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்