பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந் நஹீத் முபாரக். 45 வயதான இவர் அந்த நாட்டில் உள்ள லாகூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணவரை விவாகரத்து செய்து மகன், மகள்களுடன் வசிக்கும் இவர் லாகூரில் சுகாதாரப்பணியாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.


இந்த நிலையில், லாகூர் காவல்நிலையத்திற்கு நஹீத் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினரை யாரோ சுட்டுக்கொலை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்தில் நஹீத் முபாரக், அவரது 22 வயது மகன் தைமூர், 17 மற்றும் 11 வயதான மகள்கள் ஆகியோர் உடல்கள் இருந்தன. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.




இந்த சம்பவத்தில் நஹீத் முபாரக்கின் மூன்றாவது மகனான 14 வயது சிறுவன் மட்டும் உயிர் தப்பியிருந்தார். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தான் வீட்டின் மாடியில் தூங்கிவிட்டதாகவும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளான். போலீசாரும் வீடு முழுக்க தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, வீட்டின் சாக்கடை குழாயில் மறைக்கப்பட்ட துப்பாக்கியும், ரத்தக்கறை படிந்த ஆடையையும் போலீசார் கண்டுபிடித்தனர்.


இதையடுத்து, அந்த சிறுவனிடம் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அவர்களின் விசாரைணயில் அந்த சிறுவன் தாய் உள்பட தனது குடும்பத்தை தானே சுட்டுக் கொன்றதாக கூறியுள்ளான். இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் மூலமாக பப்ஜி விளையாடத் தொடங்கிய அந்த சிறுவன், ஒரு கட்டத்திற்கு மேல் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளான். பப்ஜி விளையாடுவதிலே நேரத்தை தொடர்ந்து செலவிட்டு வந்துள்ளான். இதனால், அவன் சரியாக படிக்காமல் இருந்துள்ளான். இதை அவனது தாயார் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்.




இந்த நிலையில், சம்பவத்தன்று பப்ஜிக்கு அடிமையான தனது மகனை நஹீத் முபாரக் கடுமையாக திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த 14 வயது சிறுவன் நஹீத் பாதுகாப்பிற்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து தாய் என்றும் பாராமல் அவரை சுட்டுக்கொலை செய்துள்ளான். மேலும், இந்த சம்பவத்தைப் பார்த்த தனது அண்ணன் தைமூர் மற்றும் தனது 17 வயது அக்கா மற்றும் 11 வயது தங்கை ஆகிய மூன்று பேரையும் சுட்டுக்கொன்றுள்ளான்.


பின்னர், போலீசுக்கு பயந்து துப்பாக்கியை வீட்டின் சாக்கடையில் மறைத்துள்ளான், பப்ஜி விளையாட்டினால் பெற்ற மகனே தாயை சுட்டுக்கொன்றும், தனது அண்ணன், அக்கா மற்றும் தங்கைகளை சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாகூரில் பப்ஜி விளையாட்டு காரணமாக நடைபெறும் நான்காவது மரணச்சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பப்ஜி மற்றும் ப்ரீ பயர் விளையாட்டுகளால் தொடர்ந்து கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்த விளையாட்டை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண