மொபைல் போன்கள் இன்றைய காலகட்டத்தில் நமது உயிர்நாடியாக மாறிவிட்டன. ஏனெனில், ஒருவரை தொடர்பு கொள்ளவும், செய்திகளைப் பெறவும், செயலிகளை பயன்படுத்தி வேலை செய்யவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கவும், சமூக ஊடகங்கள் வழியாக இணைந்திருக்கவும், என பல நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துகிறோம்.
அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு 5G-க்கு இந்தியா தயாராகி வருவதால் நாம் வாழும், தொடர்பு கொள்ளும் விதம் விரைவில் முற்றிலும் மாறப் போகிறது.
மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்றும், அதன்பிறகு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இது விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
அதன்படி, அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் 5 ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக, அடுத்த 2-3 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மலிவு விலையில் இணையம் வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த நோக்கத்திற்காக, தொலைத்தொடர்புத் துறை (DoT) சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்தியது. இதன் மூலம் பெரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து 17,876 கோடி ரூபாயைப் பெற்றது.
அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய 13 நகரங்களில் 5 ஜி சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டளவில், 5G கவரேஜ் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டு வருவதால், 5ஜி சேவைக்கு மக்கள் விரைவாக மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி சேவையால் நிகழப்போகும் மாற்றங்கள்
அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் 5G, அதிவேக இணைய இணைப்பில் இருந்து புதிய தொழில்நுட்ப செயலிகள் வரை, நம் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI), இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT), விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் கிளவுட் கேமிங் போன்ற தொழில்நுட்பங்களை செல்போன் வழியாக கொண்டு சேர்க்கவிருக்கிறது 5 ஜி சேவை.
4G நெட்வொர்க்கில் அதிக பயன்பாட்டு சுமை காரணமாக அடிக்கடி இடையூறுகள் ஏற்படுகின்றன. ஆனால், 5G நெட்வொர்க்குகள் அதி வேக சேவை மற்றும் அதிக அலைவரிசை மூலம் தடையில்லா சேவைகளை வழங்குகின்றன.
மேலும், 4Gயுடன் ஒப்பிடும் போது 100 மடங்கு அதிக திறனை 5G இணைப்பு, மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட இணைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரோன் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதன் மூலம் மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இது உதவும்.
5ஜி சேவையின் பயன்பாடுகள்
வீடியோ அழைப்புகள்
புதிய 5G நெட்வொர்க், 4G LTE-ஐ விட குறைவான தாமதத்தைக் கொண்டிருக்கும். ஐந்து மில்லி விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் டேட்டாவை கடத்தும் திறனை கொண்டுள்ளது. அதாவது, இனி, நீங்கள் மேற்கொள்ளும் வீடியோ அழைப்புகள் மங்கலாக இருக்காது. உங்களுக்குப் பிடித்த திரைப்படத்தை அதி வேகத்தில் டவுன்லோட் செய்யலாம்.
அதி வேக டவுன்லோட்
5ஜி சேவை மூலம் வேகமான பதிவிறக்க திறனையும் குறைந்த தாமதத்தையும் பெறுவீர்கள். iPhone 13, OPPO Reno8 Pro, Nothing Phone (1) ,Motorola Edge 30 Pro உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் 5ஜி சேவையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
செம்மயான கேமிங் அனுபவம்
அதி வேக இணைய சேவை மற்றும் குறைந்த தாமதம் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி கேம்களுக்கு முக்கியமாக கருதப்படுகிறது. இதன் மூலம், தடையற்ற மூழ்கவைக்கும் கேம் அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது.
இன்டர்நெட் ஆப் திங்ஸ்
ஸ்மார்ட் டிவி, ஸ்பீக்கர்கள் போன்ற 10 மடங்கு அதிகமான இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சாதனங்களுடன் உங்கள் ஸ்மார்ட்போனை இனி இணைக்க முடியும்.