இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் டெம்போ டிராவலர் பள்ளத்தாக்கில் விழுந்ததில் மூன்று ஐஐடி வாரணாசி மாணவர்கள் உட்பட ஏழு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குலு மாவட்டத்தில் உள்ள பஞ்சார் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள கியாகி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணியளவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனம் குன்றிலிருந்து கீழே விழுந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுள் இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த 3 மாணவர்களும்  அடங்குவர்.10 பேர் படுகாயமடைந்தனர்.காயமடைந்த முதல் ஐந்து பேர் குலு மண்டல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் மற்றும் 5 பேர் கீழ் நிலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






பஞ்சார் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுரேந்தர் ஷோரி, திங்கள்கிழமை நள்ளிரவு 12.45 மணியளவில் பேஸ்புக் லைவ் மூலம் ஸ்ட்ரீம் செய்து விபத்து குறித்து தெரிவித்திருந்தார். உயிரிழந்தவர்களுள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் பஞ்சார் எம்எல்ஏ தனது வீடியோவில் தெரிவித்துள்ளனர். மேலும் இருளையும் பொருட்படுத்தாமல் மீட்புப் பணியில் ஈடுபட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பஞ்சார் எம்எல்ஏ நன்றி தெரிவித்தார்.


காயமடைந்தவர்கள் முதலில் பஞ்சார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களுக்கு  முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் குலு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் சௌரப், பிரியங்கா குப்தா, டெல்லியைச் சேர்ந்த கிரண், ரிஷப் ராஜ், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்ஷிகா ஜெயின் மற்றும் ஆதித்யா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக குலு காவல் கண்காணிப்பாளர் குர்தேவ் சர்மா தெரிவித்தார்.






விபத்தில் உயிரிழந்தவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.






அதே போல மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.