லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆபத்தான பெண்ட்ரைவ்களில் இருந்து உருவாகும் சைபர் அட்டாக்கில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர். வெளிப்புற ஸ்கேனிங் டிவைஸாகப் பயன்படுத்தப்படும் இந்தக் கருவிக்கு இந்திய அரசு காப்புரிமை வழங்கியிருப்பதால், இதனை முழுமையாக உருவாக்கி, அதனை விற்பனைக்கு வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஹோப் பல்கலைக்கழகத்தின் கணிதத் துறைக்கான பள்ளியில் வருகை ஆய்வாளராகப் பணியாற்றும் முனைவர் ஷிஷிர் குமார் ஷாண்டில்யா, பேராசிரியர் அதுல்யா நாகர் ஆகியோர் இணைந்து பணியாற்றும் திட்டத்தின் கீழ் இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவியின் கண்டுபிடிப்பு, வீடு, அலுவலகம் என வெவ்வேறு இடங்களில் பெண்ட்ரைவ்களைப் பயன்படுத்துவோரை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்படும் பெண்ட்ரைவ்களை ஹேக்கர்கள் எளிதாக தாக்க முடியும் என முனைவர் ஷாண்டில்யா தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்றுக்குப் பிறகான உலகத்தில், சைபர் அட்டாக் நிகழும் சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாகவும், மக்கள் வீடு, அலுவலகம் எனப் பல இடங்களில் பணியை மேற்கொள்வதாகவும் கூறும் இரு ஆய்வாளர்களும் இப்படியான அட்டாக்கைத் தடுக்கும் பொறுப்பு மிக அவசியமானது எனக் கூறுகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள முனைவர் ஷாண்டில்யா, “சைபர் அட்டாக் அனைத்தும் முன்னேற்றம் கண்டுள்ளன. அறிவார்ந்த தொழில்நுட்ப உதவியுடன் பெர்சனல் தகவல்களைத் திருடுவதற்கும், தொடர்புகளை முடக்குவதற்கும், முக்கியமான நெட்வொர்க்களில் தடங்கல் ஏற்படுத்துவதற்கும் சைபர் அட்டாக்கை ஹாக்கர்கள் நிகழ்த்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெண்ட்ரைவ்களின் மூலமாக ஹாக்கர்கள் தீங்கு விளைவிக்கும் ஃபைல்களையும், ப்ரோகிராம்களையும் நமது கணினிக்குள் ஏற்றிவிட முடியும். நமது கணினியும் பெண்ட்ரைவ்களை நம்பத்தகுந்த நண்பனாகவே கருதுவதும் இதில் இன்னும் சிக்கலை ஏற்படுத்துகிறது” என்று கூறுகிறார்.
தொடர்ந்து, முனைவர் ஷாண்டில்யா, “கணினியின் ஆபரேடிங் சிஸ்டத்தில் மாற்றம் எதுவும் செய்யாமல் பெண்ட்ரைவை இணைக்கும் போது, அதில் தீங்கு விளைவிக்கும் ஃபைல்கள் இருந்தால், அவை தானாகவே நமது கணினிக்குள் நுழைந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கான தீர்வாக கணினிக்கும், பெண்ட்ரைவிற்கும் இடையில் மற்றொரு கருவியை இணைத்து, அதனைப் பாலமாகப் பயன்படுத்த வேண்டும்” எனக் கூறுகிறார். இந்தக் கருவியை உருவாக்க அவர் லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகம், இந்தியாவின் போபால் வி.ஐ.டி பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் குழுவின் உதவியையும் பெற்றுள்ளார்.
இந்த இடைப்பட்ட கருவி பெண்ட்ரைவை முதலிலேயே ஸ்கேன் செய்து, அதில் தீங்கு விளைவிக்கும் ஃபைல்கள் இருந்தால் அவற்றைத் தடுத்து, சைபர் அட்டாக்கை நிறுத்த உதவுகின்றன.
இந்தப் பாணியிலான சைபர் பாதுகாப்பை இயற்கையில் இருந்து கற்றுக் கொண்டதாகக் கூறும் முனைவர் ஷண்டில்யா, இதனை Nature-Inspired Cyber Security (NICS) என்று அழைக்கிறார். இந்தப் பாணியைப் பொருத்த வரை, இயற்கையில் பிற உயிரினங்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள ஒரு உயிரினம் என்னென்ன செய்யுமோ, அதனைப் பார்த்து சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அவற்றைப் பொருத்திக் கொள்வதாகும்.
முனைவர் ஷாண்டில்யா தாங்கள் கண்டுபிடித்துள்ள கருவி முழுமையாக தயாராகியுள்ளதாகவும், தற்போது உற்பத்தியாளர்களுடன் வியாபாரத்திற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.