இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு, ஆர்.டி பிசிஆர் பரிசோதனை முடிவிலும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் 10 நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால், செப்டம்பர் 10-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியின்போது அவர் அணியுடன் இருக்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. 


ரவி சாஸ்திரி எழுதிய புத்தக வெளியீடு நிகழ்ச்சி  சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெளி ஆட்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு பரவி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.






ரவி சாஸ்திரிக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவருக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று வெளியான லேட்ரல் ஃப்ளோ பரிசோதனையைத் தொடர்ந்து ஆர்.டி பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடன் தொடர்பில் இருந்த அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபி நிபுணர் நிதின் படேல் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் அருண் ஆகியோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இங்கிலாந்தில் விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளியான முடிவுகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நெகடிவ் என வந்ததை அடுத்து இன்று ஓவல் மைதானத்தில் நடந்த நான்காம் நாள் ஆட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர். மேலும், இந்திய அணியைச் சேர்ந்த அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 





இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருந்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று, வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 291 ரன்கள் தேவைப்படுகிறது.