ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20 என் லைனின் (Hyundai i20 N line ) ஃபேஸ்லிஃப்ட் வேரியண்டின், தொடக்க விலை 9 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஃபேஸ்லிப்ட் கார்கள்:


ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் தொடர்ந்து புதுப்புது கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெறும் கார்கள் உட்புற மற்றும் வெளிப்புற அமைப்புகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டு வரப்படும் கார்கள் ஃபேஸ்லிப்ட் வேரியண்ட் என குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் ஹுண்டாய் நிறுவனம் அண்மையில் ஐ20 மாடலின் ஃபேஸ்லிப்ட் கார் வேரியண்டை அறிமுகப்படுத்தியது. அதைதொடர்ந்து தற்போது, ஐ20 என் மாடலிலும் புதிய வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் பல்வேறும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது.


விலை விவரங்கள்:


வழக்கமான ஹேட்ச்பேக்கைப் போலவே , ஸ்போர்ட்டியான i20 N லைன் ஃபேஸ்லிப்டும் சிறிய வெளிப்புற மாற்றங்களை மட்டுமே பெறுகிறது. இருப்பினும் i20 N லைன் N6 மற்றும் N8 ஆகிய இரண்டு வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது - N6 மேனுவல் வேரியண்டின் விலை ரூ.9.99 லட்சம் ஆகவும்,  டாப்-ஸ்பெக் N8 DCT வேரியண்டின் விலை ரூ.12.31 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


கியர்பாக்ஸில் மாற்றம்:


புதிய வேரியண்டில் முக்கிய மாற்றமாக ஏற்கனவே இருந்த 6-ஸ்பீடு iMT கியர்பாக்ஸ் 6-ஸ்பீடு மேனுவல் யூனிட் ஆக மாற்றப்பட்டுள்ளது. இன்ஜினைப் பொறுத்தவரை, i20 N லைன் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டுடன் தொடர்கிறது. இது 120hp மற்றும் 172Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது.  இந்த இன்ஜின் i20 ஃபேஸ்லிஃப்ட்டுடன் நிறுத்தியதால், தற்போது  டர்போ-பெட்ரோலைப் பெறும் ஒரே வேரியண்ட் ஹூண்டாயின் N லைன்  மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய 6-ஸ்பீடு மேனுவல் தவிர, i20 N லைன் முன்பு போலவே 7-ஸ்பீடு DCTஐயும் பெறுகிறது. முந்தைய ஃபேஸ்லிப்ட் காரைப் போலவே, i20 N லைனும் ஸ்போர்ட்டியர் எக்ஸாஸ்ட் நோட், சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் வழக்கமான ஹேட்ச்பேக் மீது பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன் தொடர்கிறது.


வடிவமைப்பில் புதியது என்ன?


வடிவமைப்பின் அடிப்படையில் இந்த வேரியண்ட் முந்தைய மாடலில் இருந்து அதிகம் மாற்றம் எதையும் பெறவில்லை. பாராமெட்ரிக் கிரில், N லைன் லோகோவுடன் அதே முன்பம்பரையே பெற்றுள்ளது.  இரட்டை எக்ஸாஸ்ட் அவுட்லெட்டுகள், டெயில் கேட் ஸ்பாய்லர் மற்றும் இரண்டு டெயில்-லேம்ப்களை இணைக்கும் டார்க் குரோம் அலங்காரத்துடன் சிறிது மாற்றப்பட்ட பம்பர் வடிவமைப்பைப் பெறுகிறது. முந்தைய வேரியண்டில் எல்.ஈ.டி புரொஜெக்டர்கள் இருந்த நிலையில் புதிய மாடலில் முழு எல்.ஈ.டி முகப்பு விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.  அதோடு,  16-இன்ச் அலாய்களுக்கான புதிய வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது. i20 N லைன் ஃபேஸ்லிப்ட்டுடன் ஆறு விதமான ஒற்றை நிறங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.  இரட்டை வண்ணங்களில் பெற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.


உட்புற  மாற்றங்கள்:


ஸ்டேண்டர்ட் காரில் உள்ள டேஷ்போர்டு வடிவமைப்பை தான் ஐ20 N லைன் காரும் கொண்டுள்ளது. முழுக்க முழுக்க கருப்பு நிற உட்புறத்தில் நுட்பமான சிவப்பு வண்ண பூச்சுகளும் உள்ளன.  இருக்கைகள் மற்றும் ஸ்டீயரிங் மீது N லைன் பேட்ஜிங் உள்ளது. இது சிவப்பு சுற்றுப்புற விளக்குகள், பெடல்களில் மெட்டல் ஃபினிஷ் மற்றும் N லைன் சார்ந்த ஸ்டீயரிங் மற்றும் கியர் லீவர் ஆகியவற்றைப் பெறுகிறது.


காரில் உள்ள கூடுதல் அம்சங்கள்:


ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் OTA அப்டேட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவற்றுடன் கூடிய டாப்-ஸ்பெக் i20 - 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 7-ஸ்பீக்கர் போஸ் ஒலி அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. 


பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் நினைவூட்டலுடன் கூடிய மூன்று-புள்ளி இருக்கை பெல்ட்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.