கடந்த பிப்ரவரியில் சமூக வலைதளங்களுக்கு, ஓடிடி தளங்களுக்கும் சில கட்டுப்பாடுகளை அறிவித்தது மத்திய அரசு.இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துகளை முதலில் பதிவிட்டது யார் என்பதை அறியும் வசதி வேண்டும். அப்படி புகார் கொடுக்கப்படும்பட்சத்தில் அதனை 36 மணி நேரத்துக்குள் நீக்க செய்ய வேண்டும், புகாரை விசாரிக்க ஒரு தலைமை அதிகாரி உள்பட 3 அதிகாரிகளை சோஷியல் மீடியா நிறுவனங்கள் நியமிக்க வேண்டும், அவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும், நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் அறிக்கைகள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய விதிமுறைகள் கொடுக்கப்பட்டன. 




அந்த விதிமுறைகளில் ஒன்றான குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துகளை முதலில் பதிவிட்டது யார் என்பதை அறியும் வசதி  என்பது சாத்தியமல்ல என்றும், அப்படி செய்தால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை தாங்கள் கண்காணிக்க வேண்டிவரும் என்றும் வாட்ஸ் அப் எதிர்ப்பு தெரிவித்தது. அதாவது வாட்ஸ் அப்பில் இருவர் தகவல் பரிமாறினால் அது அவர்களுக்குள்ளானது மட்டுமே. தங்களால் கூட அந்த தகவலை பார்க்க முடியாது என வாட்ஸ் அப் கூறி வருகிறது. இந்த முறைதான் என்கிரிப்ஷன். இந்த பாதுகாப்பு முறையை உடைத்தால் மட்டுமே அரசு கூறும் விதிக்குள் வர முடியும். ஆனால் அப்படி வந்தால் பயனர்களின் தனியுரிமை கேள்விக்குறியாகிவிடும் என குறிப்பிடுகிறது. இது தொடர்பாக  டெல்லி உயர்நீதிமன்றத்தில்  வாட்ஸ் அப் வழக்கும் தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.




>> விபிஎன் என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?




இந்த நிலையில் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், முதல் தகவலை யார் பகிர்ந்தார் என்ற விவரத்தை மிக முக்கியமான தருணங்களிலும், குற்ற நடவடிக்கைகளிலும் மட்டுமே கேட்கப்படும். அது விசாரணைக்காகவே. குடிமக்களின் தனியுரிமையை பாதுகாப்பதில் அரசு அதிக கவனம் கொண்டுள்ளது. கும்பல் கொலை, கலவர நேரங்களில் மீண்டும் மீண்டும் பல  செய்திகள் வாட்ஸப்பில் தான் பகிரப்பட்டன. அதை மறுக்க முடியாது. அதுமாதிரியான நேரங்களில் முதல் தகவலை யார் பகிர்ந்தார் என்ற விவரம் அறிதல் மிக முக்கிய பங்கு வகிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், விளம்பர நோக்கங்களுக்கான தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பயனர்களின் சில விவரங்களை பகிர்ந்துகொள்ள வாட்ஸ் அப் புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வந்ததையும் தொழில்நுட்ப அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.




குறிப்பிட்ட தகவலை வேண்டிய நேரத்தில் மட்டுமே கொடுத்தால் போதும் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் பயனர்களை முழுமையாக கண்காணித்தால் மட்டுமே தகவல் அனுப்பப்பட்டவர் குறித்து விவரம் கொடுக்கலாம் என வாட்ஸ் அப் தொடர்ந்து கூறுகிறது. வாட்ஸ் அப்பின் புதிய விதிகளால் ஏற்கெனவே பல குழப்பத்தில் இருக்கும் பயனாளர்கள் வாட்ஸ் அப்-மத்திய அரசு பேச்சுவார்த்தைகளால் மேலும் குழப்பமடைந்துள்ளனர்.




>> Twitter Verification : ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்குவது எப்படி?