பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக்,ட்விட்டர் உள்ளிட்டவை இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை இன்னும் ஏற்கவில்லை. இதன் காரணம இவை தடை செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்து வருகிறது. அவ்வாறு இந்தியாவில் இவை தடை செய்யப்பட்டால் அதை எப்படி பயன்படுத்துவது என்று பலர் யோசித்து வருகின்றனர். அதற்கு உள்ள ஒரே வழி விபிஎன் பயன்படுத்தி இந்த தளங்களை பயன்படுத்துவது தான். 


இந்தச் சூழலில் பலருக்கு விபிஎன் என்றால் என்ன? அது ஆபத்தானதா? அது எப்படி தடை செய்யப்பட்ட வலைதளங்களை பார்க்க உதவும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான பதில்களை தற்போது காண்போம். 


ஐபி முகவரி:


முதலில் விபிஎன் குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்பு இணையத்தில் நீங்கள் தேடும் அல்லது அனுப்பும் தகவல்கள் எப்படி செல்கிறது என்று தெரிந்து கொள்வோம்.  உங்களுடைய லேப்டாப், கணினி அல்லது மொபைல் போன் ஆகியவற்றில் இன்டர்நெட் பயன்படுத்தும் போது நீங்கள் ஒரு தகவலை தேட அல்லது அனுப்ப முற்படுவீர்கள். அப்போது உங்களுடைய கருவிக்கு ஐபி முகவரி என்ற எண் அளிக்கப்படும். இந்த ஐபி முகவரி மூலம் உங்களுடைய தரவுகள் இணையத்தில் செல்லும். 


அதாவது நீங்கள் ஒரு கூட்டம் நிறைந்த இடத்தில் இருக்கும் போது உங்களை எப்படி பெயர் அல்லது ஒரு நம்பர் வைத்து அரிய முடியுமோ அப்படி தான் இந்த ஐபி முகவரியும். நீங்கள் உங்களுடைய கருவியில் இன்டர்நெட் பயன்படுத்த துவங்கும் போதே இந்த ஐபி முகவரி வந்துவிடும். இதை உங்களுக்கு இணைய சேவை அளிக்கும் நிறுவனம் தரும். இதை ஒரு ஒவ்வொரு சேவை நிறுவனம் தருவதால், நீங்கள் இன்னொரு இன்டர்நெட் பயன்படுத்தும் போது ஐபி முகவரி மாறும். அதாவது வைஃபை பயன்பாட்டின் போது ஒரு ஐபி முகவரி இருக்கும். அதே மொபைல் டேட்டா பயன்படுத்தும் போது வேறு ஒரு ஐபி முகவரி இருக்கும். 


 


எதற்கு விபிஎன்?


இந்த ஐபி முகவரி வைத்து நீங்கள் இணையதளத்தில் தேடுவது, செல்லும் வலைத்தளங்கள் மற்றும் உங்களுடைய சமூக வலைத்தள கணக்குகள் பயன்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். இது உங்களுக்கு இணைய சேவை அளிக்கும் நிறுவனம் இடம் இருக்கும். இவ்வாறு நீங்கள் உங்களுடைய தகவல் அவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்தால் அதற்கு பார்க்ஸி சர்வர் அல்லது விபிஎன் பயன்படுத்த வேண்டும். அத்துடன் இந்தியாவில் தடை செய்யப்பட்ட வலைதளங்களை பயன்படுத்தவும் நீங்கள் விபிஎன் உபயோகப்படுத்தலாம். 




விபிஎன் என்றால் என்ன?


விபிஎன் என்பது விர்ச்சுவல் பிரைவேட் நெட்ஒர்க். அதாவது விபிஎன் பயன்படுத்தும் போது உங்களுடைய தகவல் அனைத்தும் பாதுகாப்பாக ஒரு விபிஎன் சர்வர் மூலம்  மறைக்கப்பட்டு செல்லும். அதாவது உங்களுடைய ஐபி முகவரி மாறி செல்லும். இதனால் நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் விபிஎன் மூலம் அமெரிக்கா, அல்லது ஆஸ்திரேலியாவில் இருந்து தேடுவது போல் காட்ட முடியும்.


மேலும் உங்களுடைய இணையதள சேவை நிறுவனத்திற்கு நீங்கள் விபிஎன் பயன்படுத்துகிறீர்கள் என்பதை மட்டும் தான் அறிய முடியும். ஆனால் முன்பு போல் நீங்கள் எந்த தளத்திற்கு செல்கிறீர்கள். என்ன தேடுகிறீர்கள் என்பது குறித்து அவர்களாலும் இப்போது தெரிந்து கொள்ள முடியாது. இதனால் உங்களுடைய இணையதள பயன்பாடு பாதுக்காக்கப்படும். அத்துடன் இந்தியாவில் தடை செய்யப்பட்ட வலைதளங்களை இந்தியாவில் இருக்கும் ஐபி முகவரியை வைத்து பயன்படுத்த முடியாது. ஆனால் விபிஎன் உதவியுடன் உங்களுடைய ஐபி முகவரி மாறுவதால் நீங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட வலைதளங்களை பார்க்கலாம். 


 


விபிஎன் ஆபத்தானதா?


விபிஎன் தகவல்களை என்கிரிப்ஷன்(குறியாக்கம்) செய்வதால் உங்களுடை தகவல்களை ஹேக்கர்களால் எளிதாக அறிய முடியாது. அத்துடன் உங்களுடைய ஐபி முகவரியும் விபிஎன் மூலம் மாறுவதால் உங்களுடைய இடத்தை அவர்களால் கண்டறிய முடியாது. அத்துடன் உங்களுடைய இணையதள தேடல்கள் அனைத்தும் யாருக்கும் தெரியாது. எனவே இது மிகவும் பாதுகாப்பான ஒன்று. இதில் ஆபத்துகள் எதுவும் இல்லை. மேலும் இந்தியாவில் விபிஎன் பயன்படுத்தவது சட்டபடி தவறு இல்லை. எனினும் இதை தேவைக்காக மட்டுமின்றி வேறு சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தினால் அது குற்றமாகும். 




எப்போது விபிஎன் பயன்படுத்த வேண்டும்?


இணையதள பயன்பாட்டின் போது உங்களுடைய தேடல்கள் யாருக்கும் தெரிய வேண்டாம் என்றால் அப்போது விபிஎன் பயன்படுத்தலாம். மேலும் தடை செய்யப்பட்ட வலைதளங்களை பயன்படுத்த விபிஎன் உபயோகம் செய்யலாம். அத்துடன் பொது இடங்களான மால், தியேட்டர், ரயில்வே நிலையம், காபி ஷாப் உள்ளிட்ட இடங்களில்  இன்டர்நெட் சேவையை பயன்படுத்தும் போது விபிஎன் கட்டாயமாக பயன்படுத்தினால் மிகவும் நல்லது. அத்துடன் வீட்டிலிருந்து அலுவலகத்தின் கோப்புகளை இணையதள மூலமாக பயன்படுத்தும் போது விபிஎன் பயன்படுத்த வேண்டும். 


விபிஎன் பயன்படுத்தும் போது நெட்வொர்க் வேகம் குறையுமா?


விபிஎன் பயன்படுத்தும் போது உங்களுடைய நெட்வொர்க் வேகம் குறையும் சூழல் உருவாகும். ஏனென்றால் விபிஎன் சர்வர் மூலம் உங்களுடைய தகவல்கள் என்கிரிப்ஷன்(குறியாக்கம்) செய்யப்பட்ட பின்னர் தான் அனுப்பப்படும். இதற்கு சற்று நேரம் எடுக்கும். மேலும் இலவசமாக விபிஎன் பயன்படுத்தினால் அதில் தரவுகள் அனுப்புவதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆகவே அப்போது இணையத்தின் வேகம் இன்னும் குறையும் வாய்ப்பு உண்டு.