Pixel Watch 2: கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2 ஸ்மார்ட் வாட்ச்சின் விலை, இந்திய சந்தையில் 39 ஆயிரத்து 990 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


பிக்சல் 2 ஸ்மார்ட் வாட்ச்:


கூகுள் நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்யும், மேட் பை கூகுள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது பிக்சல் 8 செல்போன் சிரீஸ் மாடல்கள் உடன், பிக்சல் 2 ஸ்மார்ட் வாட்ச்சும் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வாட்ச்சில் வெளிப்புறத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவிட்டாலும், உட்புறத்தில் முந்தைய மாடலை காட்டிலும் பல்வேறு புதுப்புது மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, புதிய செயலி மாற்றியமைக்கப்பட்ட சென்சார் வரிசை, கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள், இதய துடிப்பு கண்காணிக்கும் அம்சம் மற்றும் Wear OS 4 உள்ளிட்ட மேம்படுத்தல்களைக் கொண்டுள்ளது. 24 மணி நேரம் வரை செயல்படும் வகையிலான பேட்டரியை கொண்டுள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் 39 ஆயிரத்து 990 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  


வடிவமைப்பு:


முந்தைய மாடலில் லேசான கட்-அவுட் வடிவமைப்பில் இருந்த அதன் தோற்றம், தற்போது முழுமையாக கிளாசி தோற்றத்தில் உள்ளது. ஷார்ப் கட்-அவுட் எதுவும் இதில் இல்லை. முந்தைய மாடலை போன்று ஸ்டெயின்லெஸ் ஸ்டீலாக இல்லாமல், 100 சதவிகிதம் மறுசுழற்சி செய்யக் கூடிய அலுமியம் கொண்டு இந்த வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் 31 கிராம் எடைகொண்ட இந்த வாட்ச், ஒ.எல்.ஈ.டி டிஸ்பிளே கொண்டுள்ளது. வாட்ச்சின் பின்புறத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட எல்.ஈ.டி., மற்றும் போட்டோ டையோடுகளை கொண்டுள்ளன. இது உடல்நிலை தொடர்பான துல்லியமான தரவுகளை வழங்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2GB ரேமையும், 32GB சேமிப்பு திறனையும் கொண்டுள்ளது. மேட் பிளாக், மெருகூட்டப்பட்ட வெள்ளி, ஷாம்பெயின் தங்கம் ஆகிய நிறங்களில் இது கிடைக்கப்பெறும். 


புதிய சென்சார்கள் & பேட்டரி திறன்:


தோல் வெப்பநிலை மற்றும் தொடர்ச்சியான எலக்ட்ரோடெர்மல் செயல்பாடு (EDA) கணக்கிடும் சென்சார்கள் சேர்க்கப்பட்டுள்ளன.  இந்த சென்சார் இதயத் துடிப்பு மாறுபாடு, இதயத் துடிப்பு  போன்ற அளவீடுகளுடன் இணைந்து உடல் அழுத்தத்தைக் கண்டறிய உதவும். 24 மணி நேரம் தாங்கும் வகையில் 306mAh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 30 நிமிடங்களில் 50 சதவிகிதம் அளவிற்கும், 75 நிமிடங்களில் முழு அளவிற்கும் சார்ஜ் ஆகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகமான செயல்திறனுக்காக குவால்காம் ஸ்னாப்டிராகன் W5 புராசசர் வழங்கப்பட்டுள்ளது.


உடல்நலன் & பாதுகாப்பு அம்சம்:


புதிய வாட்ச் சைக்கிள் ஒட்டுவது போன்ற 7 உடற்பயிற்சிகளை பயனாளர்கள் மேற்கொள்வதை தாமாகவே உணர்ந்து, அதன் மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான தரவுகளை டிஸ்பிளேயில் வழங்கக்கூடியது. இந்த நேரங்களில் இதயதுடிப்பு தொடர்பாக பிரத்யேக தரவுகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கூடுதல் பாதுகாப்பு அம்சம் ஒன்றயும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.  காரில் செல்கிறீர்கள் என்றால் இறங்கிய வேண்டிய இடத்திற்கான, சராசரி பயண நேரம் அடிப்படையில் ஒரு டைமரை செட் செய்து கொள்ளலாம். அந்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடையாவிட்டால் பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷன் வழங்கப்படும். அதற்கு பயனாளர் பதிலளிக்காவிட்டால், அவர்களது லைவ் லொகேஷன் பயனாளரின் அவசரகாலத் தொடர்புகளுடன் பகிரப்படும்.