பிரபல தேடுபொறி மற்றும் இயங்குதள நிறுவனமான கூகுள் அவ்வபோது தனது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது . அந்த வகையில் தற்போது கூகுள் தனது தளத்தில் பல தேடல் ( multi-search) என்னும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் ஒரே நேரத்தில் உரை மற்றும் படங்களைப் பயன்படுத்த மக்களை அனுமதிக்கிறது.
தற்போது அமெரிக்காவில் பீட்டா வெர்சன் அறிமுகமாகியுள்ளது. முதற்கட்டமாக ஆங்கிலத்தில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது. இதன் மூலம் உரையாக மட்டுமல்லாமல் , படங்களாகவும் தங்களது தேடலை பயனாளர்கள் பெறலாம். multi-search வசதி மூலம் உங்களுக்கு முன்னால் உள்ள ஒரு பொருளைப் பற்றி நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கலாம் அது வண்ணமாக இருக்கலாம் அல்லது ஒரு பிராண்டாக இருக்கலாம் அல்லது ஒரு காட்சியாக கூட இருக்கலாம்.அதன் மூலம் உங்கள் தேடலை செம்மைப்படுத்திக்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடங்குவதற்கு, Android அல்லது iOS இல் Google பயன்பாட்டைத் திறந்து, லென்ஸ் கேமரா ஐகானைத் தட்டி, உங்கள் ஸ்கிரீன் ஷாட்களில் ஒன்றைத் தேடவும். உங்கள் கேலரியில் இருக்கும் ஏதாவது புகைப்படங்களை தேர்வு செய்த பின்னர் மேலே swipe செய்து "+ Add to your search" என்னும் வசதியை கிளிக் செய்து உங்களது உரையை பதிவிட வேண்டும். உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு ஊதா நிற ஆடை இருக்கிறது என வைத்துக்கொள்ளுவோ. தற்போது கருப்பு திராவிடன் என்பது ட்ரெண்டிங்கில் இருக்கிறது அல்லவா. அதனால் அதே டிசைனில் கறுப்பு நிற அடை வேண்டும் என விரும்பினால் . உங்களது ஊதா நிற ஆடையின் புகைப்படத்தை பதிவிட்டு , உரையில் பிளாக் என பதிவிட்டால் போதும் , அந்த டிசைனில் கருப்பு நிற ஆடை எங்கு கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.
இந்த வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்திய கூகுள் “செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய முன்னேற்றங்களால் இவை அனைத்தும் சாத்தியமாகின்றன, இது உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை மிகவும் இயற்கையான மற்றும் உள்ளுணர்வு வழிகளில் புரிந்துகொள்வதை இன்னும் எளிதாக்குகிறது" என்று தெரிவித்துள்ளது. மேலும் தேடலில் உள்ள எங்களின் சமீபத்திய AI மாடல் -- நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முடிவுகளை மேம்படுத்த, MUM ( கேள்விகளுக்கான தகுந்த பதிலை கொடுப்பதற்காக கூகுள் உருவாக்கிய அல்காரிதம்தான் மம் ) மூலம் இந்த அம்சத்தை மேம்படுத்துவதற்கான வழிகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்,"என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய வசதி தற்போது மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.