ஐபிஎல் தொடரில் நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் டூபிளசிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 64 பந்துகளில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்து தன்னுடைய 100ஆவது ஐபிஎல் இன்னிங்ஸில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 20 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 181 ரன்கள் எடுத்தது. 


இதைத் தொடர்ந்து 182 ரன்கள் என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிக் காக் 3 ரன்களில் ஹெசல்வூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மணீஷ் பாண்டேவும் 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 5 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் க்ரூணல் பாண்ட்யா ஆகியோர் சற்று அதிரடியாக விளையாட தொடங்கினர்.


 






எனினும் கே.எல்.ராகுல் 30 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் க்ரூணல் பாண்ட்யா மற்றும் தீபக் ஹூடா சற்று நிதனமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 12 ஓவர்களில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்து. கடைசி 8 ஓவர்களில் அந்த அணி வெற்றி பெற 83 ரன்கள் தேவைப்பட்டது. இதன்காரணமாக லக்னோ வீரர்கள் அதிரடியாக விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் லக்னோ வீரர்கள் தூக்கி அடிக்க முற்பட்டு அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். 


தீபக் ஹூடா 13 ரன்களிலும், ஆயூஷ் பதோனி 13 ரன்களிலும், க்ரூணல் பாண்ட்யா 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 18 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. 12 பந்துகளில் 34 ரன்கள் லக்னோ வெற்றிக்கு தேவைப்பட்டது. இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஆர்சிபி அணியின் ஹேசல்வூட் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண