கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலரும் வீட்டில் இருந்தே தங்களின் வேலைகளை கவனித்து வருகின்றனர். குழந்தைகளின் படிப்பு முதல் அலுவலக வேலை வரை  அனைத்து இணையம் வழியாகவே நடைபெற்று வருகிறது. இதில் வீடியோ கால் குறிப்பாக குழு வீடியோ கால் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அந்த வீடியோ கால் சேவையில் ஒன்றுதான் ’கூகுள் மீட்’ . முன்னதாக ஹேங் அவுட் என இருந்த கூகுளின் வீடியோ கால் சேவை தற்போது கூகுள் மீட் என  மேம்படுத்தப்பட்ட பதிப்பாக பயன்பாட்டில் உள்ளது. கூகுள் மீட் நிறுவனம் கடந்த ஆண்டே தனது குழு வீடியோ கால் சேவையில் சில வரம்புகளை கொண்டு வர இருப்பதாக அறிவித்தது. ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் ஸூம்(zoom) , ஸ்கைப்(skype) போன்ற பிற குழு வீடியோ கால் செயலிகள் ஆதிக்கம் செலுத்தி வந்ததால், தனது வரம்பு குறித்தான அறிவிப்பில் இருந்து பின்வாங்கியது கூகுள் மீட்.




இந்நிலையில் நேற்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது , அதன்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பங்கேற்கும் குழு வீடியோ காலின் கால வரம்பு 60 நிமிடங்கள் மட்டுமே என அறிவித்துள்ளது. இது கூகுள் மீட்டினை பயன்படுத்தி வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு சற்று அதிர்ச்சி அளிக்கக்கூடியதுதான் என்றாலும் , இது முன்பே எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புதான்.  கடந்த ஆண்டு  செப்டம்பர் 30-ஆம் தேதியே இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை 2021 மார்ச் மாதம் ஒத்திவைத்தது. அதன் பிறகு  ஜூன் 30-ஆம் தேதிக்கு மாற்றியது. தனது நிலைப்பாடில் இருந்து பின்வாங்குமோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான்  இந்த புதிய அறிவிப்பை கூகுள் மீட்டின் 9 to 5 Google நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


 






கூகுள் மீட்டில் குழு வீடியோ காலை தொடங்கியிருக்கும் நபர் , அதாவது ஹோஸ்ட்டிற்கு (host)  55 - வது நிமிடங்களில் நோட்டிஃபிக்கேஷன் ஒன்று வெளியாகும். அதன் மூலம் வீடியோ கால் வரம்பு முடிய இருப்பதை 5 நிமிடங்களுக்கு முன்னதாக  அவர் அறிந்துக்கொள்ளலாம். அழைப்பை அதற்கு மேல் தொடர விரும்பினால் , அதற்கான கட்டண சந்தாவை  ஹோஸ்ட்(host) பெற்றிருக்க வேண்டும். இதற்காக மாதம் கிட்டத்தட்ட 740 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில்) வசூலிக்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு குழு வீடியோ காலிற்கு மட்டுமே. ஒருவருக்கு ஒருவர் (one to one ) வீடியோ காலில் பேசிக்கொள்ள விரும்பினால்  24 மணிநேரமும் இலவச சேவையை பெற்றலாம். முதற்கட்டமாக அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, பிரேசில் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது..