Goggle Warning: ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கும் கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய உச்சமாக மாறியுள்ளது செயற்கை நுண்ணறிவு திறன்.  தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக சாட் ஜிபிடியின் வெற்றி  தான் ஏஐ கருவிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றே செல்லலாம்.


கூகுள் நிறுவனம் வார்னிங்:


சாட்சிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பயன்படுத்துவோரின் எண்ணிகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏஐ கருவிகள் நிச்சயம் மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில், ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு ஆபத்துகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. 


இந்த நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கும் கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அபாயங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது.


”தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம்"


அதன்படி,  ”கூகுளின் ஜெமினி ஏஐ ஆப் மற்றும் இணையதளத்தை பயன்படுத்தும்போது, எந்த ஒரு  தனிப்பட்ட விவரங்களை உள்ளிடுவதை தவிர்க்க வேண்டும். ஜெமினி ஆப்பில் உங்களின் தனிப்பட்ட விவரங்கள், உங்களது நிறுவனங்கள் உள்ளிட்ட தகவல்களை பகிர வேண்டாம். உரையாடலின்போது, நீங்கள் அனுப்பும் விவரங்களை நீங்கள் டெலிட் செய்தாலும் அது நீங்காது.


ஜெமினி ஆப்பையே டெலிட் செய்தாலும் உங்களின் உரையாடல் நீக்கம் செய்யப்படாது. ஜெமினி ஆப் மற்றும் வலைதளத்தில்  நீங்கள் செய்யப்படும் உரையாடல் மூன்று வருடத்திற்கு நீக்கப்படாது.  


மேலும், ஜெமினி ஆப்பின் செயல்பாடுகள் முடக்கப்பட்டாலும், பயனரின் உரையாடல் விவரங்கள் 72 மணி நேரம் வரை இருக்கும்.  இதனால், உங்களின் தனிப்பட்ட விவரங்கள் ஜெமினி ஆப் அல்லது வலைதளத்தில் உரையாடலின்போது உள்ளிட  வேண்டாம்” என்று கூறியுள்ளது கூகுள். 


ஜெமினி ஏஐ என்றால் என்ன?


ஜெமினி என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் ஒன்றை கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.  மூன்று வெர்ஷன்களில் கூகுள் நிறுவனம் ஜெமினி ஏஐ தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, அல்ட்ரா (Ultra), ப்ரோ (Pro), நானோ (Nano) என்ற மூன்று வெர்ஷன்களில் ஜெமினி ஏஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த ஜெமினி ஏஐ புகைப்படங்கள், ஆடியோ புரிந்துகொள்ளும் தன்மை கொண்டது. மேலும், சிக்கலான கணிதங்களை முடித்து வைக்கவும் உதவும்.  கணிதம், இயற்பியல், வரலாறு, சட்டம், மருத்துவம் என 57 பாடங்களின் சந்தேகங்களுக்கு தீர்வை கொடுக்கும்.  உலக அறிவு மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் ஆகிய இரண்டுமே உள்ளது என்று கூகுள் கூறியுள்ளது.


மேலும், இந்த ஜெமினி ஏஐ-யால் கோடிங் (coding) எழுதவும் முடியும். மேலும், பைதான் (Python), ஜாவா (Java), சி++ (C++) மற்றும் கோ (G0) போன்ற கணினி மொழிகளை புரிந்து கொள்ளும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.