தனது I/O 2026 முக்கிய உரையில், கூகுள் கணினி, ஆண்ட்ராய்டு, உற்பத்தித்திறன் செயலிகள் மற்றும் அணியக்கூடிய சாதனங்களின் எதிர்காலம் குறித்த ஒரு முன்னோட்டத்தை கூகுள் வழங்கியது. அதில், எதிர்பார்த்தபடியே, ஜெமினி AI இந்த நிகழ்வின் முக்கிய மையமாக இருந்தது. புதிய ஜெமினி 3.5 AI மாடல்கள் மற்றும் அதன் சேவைகளுக்கான புதிய அம்சங்கள் உட்பட பல முக்கிய அறிவிப்புகளை அந்நிறுவனம் வெளியிட்டது. கூகுள் தனது முதல் ஆண்ட்ராய்டு XR ஆடியோ கண்ணாடிகளையும் அறிமுகப்படுத்தியது. அதோடு, கவனத்தை ஈர்க்கும் வகையில், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புதிய தேடல் மற்றும் யுனிவர்சல் கார்ட் ஆகியவை பற்றிய அறிவிப்பும் வெளியானது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.
தேடலுக்கு(Search) ஒரு புதிய AI மறுவடிவமைப்பு
இந்த அறிவிப்புகளில் முதலில் நம் கவனத்தை ஈர்ப்பது, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கூகுள் தேடல் பட்டிதான்(Search Bar). அந்நிறுவனம் இப்போது ஒரு புதிய AI-ஆற்றல் பெற்ற இடைமுகத்துடன் தேடலை மறுவடிவமைப்பு செய்துள்ளது. அதில், உரை மட்டுமின்றி, புகைப்படங்கள், வீடியோக்கள், கோப்புகள் மற்றும் உலாவித் தாவல்களையும் உள்ளீடாக நாம் பயன்படுத்தலாம்.
அதன்படி, குறுகிய மற்றும் முக்கிய வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட தேடல்களுக்கு பதிலாக, இந்தப் பட்டி இப்போது நீண்ட மற்றும் இயல்பான உரையாடல்களை உள்வாங்கும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், நீங்கள் சில வார்த்தைகளை உள்ளீடு செய்துவிட்டு, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை கூகுள் புரிந்துகொள்ளும் என்று நினைப்பீர்கள். அதன் பின்னர், நீங்களே முடிவுகளை தேடுவீர்கள். ஆனால் இப்போது, மக்கள் தாங்கள் பேசும் விதத்திலேயே, அதாவது அவர்களின் இயல்பான மொழியில் உள்ளீடு செய்ய வேண்டும் என்று கூகுள் விரும்புகிறது. அதோடு, நீங்கள் தேடல் பொத்தானை அழுத்திய பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இப்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம்.
இதற்காக, கூகுள் 'தகவல் முகவர்கள்', அதாவது Information Agents என்று அழைக்கப்படும் ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை, மக்கள் இணையத்தில் அவர்களுக்கு தேவையான விஷயங்களை கண்காணிக்கும் விதத்தை முற்றிலும் மாற்றும். அந்த விஷயங்களை, நீங்களே இணையதளங்ளில் மீண்டும் மீண்டும் சரிபார்ப்பதற்கு பதிலாக, உங்களுக்காக பின்னணியில் ஒரு விஷயம் குறித்து கண்காணிக்குமாறு தேடுபொறியிடம் (Search) நீங்கள் கேட்கலாம்.
உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஆடை மீண்டும் ஸ்டாக்கிற்கு வருவதற்காக காத்திருக்கிறீர்கள் அல்லது வீட்டிற்கு தேவையான ஒரு பொருளை கண்காணிக்கிறீர்கள், இல்லையென்றால் ஒரு டிவி அல்லது ஸ்மார்ட்போனின் விலை குறையும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவற்றை ஒவ்வொரு நாளும் நீங்கள் கண்காணிப்பதற்கு பதிலாக, உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கூகுளிடம் ஒருமுறை சொல்லிவிட்டால் போதும், அந்த செயற்கை நுண்ணறிவு (AI), இணையத்தில் தொடர்ந்து கண்காணித்து, உங்களுக்கு தேவையான மாற்றம் நிகழும்போது, அதை உங்களுக்கு அறிவிப்பு செய்யும்.
இதன் மூலம், நீங்கள் அந்த விஷயத்தை தொடர்ந்து நினைவில் வைத்துக்கொண்டு, அதற்காக தினமும் நேரத்தை செலவிட வேண்டியதில்லை. மாறாக, கூகுள் அந்த வேலையை செய்து, உங்களுக்கு தேவையான ரிசல்ட்டை கொடுத்துவிடும்.
ஆன்லைன் ஷாப்பிங்கை எளிதாக்கும் யுனிவர்சல் கார்ட்
கூகுளின் மற்றொரு பெரிய அறிவிப்பு, யுனிவர்சல் கார்ட்(Universal Cart). இதை, ஆன்லைன் ஷாப்பிங்க செய்யும் பெரும்பாலானவர்கள் நிச்சயம் பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பொதுவாக, ஆன்லைனில் ஷாப்பிங்க செய்பவர்கள், ஒரு பொருளை வாங்குவதற்கு பல செயலிகளையும், இணையதளங்களையும் பயன்படுத்துவார்கள். அதாவது, ஒரு தளத்தில் அந்த பொருளை பார்த்தபின், பல தளங்களில், அதாவது, ஃபிப்கார்ட், அமேசான் போன்று, வெவ்வேறு தளங்களில் அதன் விலைகளை ஒப்பிட்டு பார்ப்பார்கள். அதேபோல், அந்த பொருள் வேறு எங்காவது உள்ளதாக என்றும் பார்ப்பார்கள். அதன் பிறகு, அவற்றின் விலைகளை ஒப்பிடுவார்கள். ஆனால், இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், ஒவ்வொரு தளத்தில் உள்ள விலைகளை ஞாபகம் வைத்திருப்பதுதான்.
கூகுள் இந்த அமைப்பை கூகுள் வாலட் மற்றும் கூகுள் பே உடன் இணைக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவு, லாயல்டி சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் சேமிக்கப்பட்ட சலுகைகளை தானாகவே சரிபார்த்துவிடும் என்பதால், பயனர்கள் பணம் செலுத்தும்போது கிடைக்கும் சேமிப்புகளை தவறவிட மாட்டார்கள் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும்.
