இந்தாண்டின் கூகுள் டூடுல் போட்டிக்கான வெற்றியாளரை கூகுள் இன்று அறிவித்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த ஷ்லோக் முகர்ஜி, 'இந்தியா ஆன் தி சென்டர் ஸ்டேஜ்' என்ற டூடுலுக்காக வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
ஷ்லோக் முகர்ஜிக்கு கல்வி உதவித்தொகையாக 5 லட்சம் ரூபாயும் தொழில்நுட்ப உதவி தொகுப்பாக அவரது பள்ளிக்கு 2 லட்சம் ரூபாய் அளிக்கப்பட உள்ளது. இன்று, ஷ்லோக்கின் டூடுல் Google.co.in இல் இடம்பெற்றுள்ளது.
தனது டூடுலைப் பகிர்ந்து அதுகுறித்து விவரித்துள்ள ஷ்லோக், "அடுத்த 25 ஆண்டுகளில், நமது இந்திய விஞ்ஞானிகள் மனிதகுலத்தின் மேம்பாட்டிற்காக தங்கள் சொந்த சுற்றுச்சூழல் நட்பு ரோபோவை உருவாக்குவார்கள்.
பூமியிலிருந்து விண்வெளிக்கு வழக்கமான விண்மீன் மண்டல பயணத்தை இந்தியா மேற்கொள்ளும். யோகா மற்றும் ஆயுர்வேதத்தில் இந்தியா மேலும் வளரும், மேலும் வரும் ஆண்டுகளில் வலுவடையும்.
அடுத்த 25 ஆண்டுகளில், இந்தியாவால் அதை செய்து காட்ட முடியும்" என குறிப்பிட்டுள்ளார். இந்தாண்டு, இந்தியா முழுவதிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளிடமிருந்து 1,15,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் போட்டிக்காக வந்து குவிந்துள்ளது.
இதுகுறித்து கூகுள் டூடுல் பக்கத்தில், "மாணவர்கள் தங்கள் உள்ளீடுகளின் மூலம் கொண்டு வந்த படைப்பாற்றல் மற்றும் கற்பனைத்திறனைக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம். மேலும், பல டூடுல்களில் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவை பொதுவான கருப்பொருளாக வெளிவருவதைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்டிக்கான வெற்றியாளரை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை நீனா குப்தா, டிங்கிள் காமிக்ஸின் தலைமை ஆசிரியர் குரியாகோஸ் வைசியன், யூடியூப் கிரியேட்டர்ஸ் ஸ்லேய்பாயிண்ட் மற்றும் கூகுள் டூடுல் குழுவுடன் கலைஞரும் தொழிலதிபருமான அலிகா பட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நடுவர்கள் சேர்ந்து, நாடு முழுவதிலும் இருந்து 20 இறுதிப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியைக் மேற் கொண்டிருந்தனர். கலைத் தகுதி, படைப்பாற்றல், போட்டித் தலைப்புடன் சீரமைத்தல், அணுகுமுறையின் தனித்துவம் மற்றும் புதுமை ஆகிய அளவுகோல்களில் போட்டியாளர்களின் உள்ளீடுகளை அவர்கள் மதிப்பீடு செய்தனர்.
மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் வகையில் 20 இறுதி டூடுல்கள் ஆன்லைனில் காட்சிப்படுத்தப்பட்டன. தேசிய அளவில் ஒரு வெற்றியாளரை தவிர, 4 குழு வெற்றியாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூகுள் போட்டிக்கான டூடுல், இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதையும், கற்பனையை கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.