Google Doodle: சுதந்திர தினத்தையொட்டி, கூகுள் மிகவும் தனித்துவமான டூடுலை உருவாக்கியுள்ளது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அற்புதமான ஜவுளி கைவினைகளை காட்சிப்படுத்தியுள்ளது.


சுதந்திர தினம்:


மன்னராட்சியால் சிதறிக்கிடந்த சிறு சிறு நாடுகளை தன் ராணுவ பலத்தால், வெள்ளையர்கள் ஒருங்கிணைத்து ஆட்சி செய்து வந்தனர். கி.பி 1800ஆம் ஆண்டு காலத்தில் தென் தமிழ்நாட்டில் மருது சகோதரர்களால் எதிர்க்கப்பட்டது தொடங்கி 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை வெள்ளையரின் ஆட்சிக்கட்டுப்பாட்டில் இருந்த இப்போதைய இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் என ஒருங்கிணைந்த நிலப்பரப்பில் இருந்த பல்வேறு வீரர்கள், தலைவர்கள், பொதுமக்கள் என எண்ணற்றவர்களின் தியாகத்தாலும், போராட்டத்தாலும் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றுடன் 76 ஆண்டுகள் நிறைவடைந்து 77வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 77வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் கோலாகலமான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்:






இதனையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்திய கலாச்சாரம் மற்றும் அதன் வரலாற்று நிகழ்வுகளை பெருமைப்படுத்தும் வகையில், இந்த டூடுலை வெளியிட்டிருக்கிறது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அற்புதமான ஜவுளி கைவினைகளை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த டூடுலை டெல்லியைச் சேர்ந்த கைவினை கலைஞர் நம்ரதா குமார் என்ற கலைஞர் உருவாக்கியுள்ளார். இது நாட்டின் வளமான மற்றும் மாறுபட்ட பாரம்பரியங்களை சித்தரிக்கிறது. மேலும், உலகின் கைவினை கலைஞர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், அச்சுப்பொறிகள் மற்றும் எம்ப்ராய்டரி செய்பவர்களின் கூட்டு கைவினைத்திறைனைக் காட்டி சிறப்பித்துள்ளது. 


21 ஜவுளி வகைகள்:


அதன்படி, குஜராத்தின்  கட்ச் எம்ப்ராய்டரி, மேற்கு வங்கத்தின் ஜம்தானி பட்டு, ஹிமாச்சலின் நெசவு பட்டு,  ஒடிசாவின் இகாட், கோவாவின் குன்பி பட்டு, காஷ்மீரின் பாஸ்மினா பட்டு, உத்தர பிரதேசத்தின் பெனாரசி பட்டு, மும்பையின் பைதானி பட்டு, மேற்கு வங்கத்தின் காந்தா எம்ப்ராய்டரி, நாகலாந்தின் நாகா பட்டு, குஜராத்தின் அஜ்ராக் பிளாக் பிரிட்டிங், அருணாச்சல பிரதேசத்தின் அபதானி பட்டு, பஞ்சாபின் புல்காரி, பீகாரின் சுஜினி  எம்ப்ராய்டரி, ராஜஸ்தானின் லிஹேரியா, தமிழ்நாட்டின் காஞ்சி பட்டு, குஜராத்தின் பாந்தினி, கேரளாவின் காசவு பட்டு, ஆந்திராவின் கலம்காரி,  அசாமின் மேக்லா போன்றவற்றை டூடுலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.