எதாவது சந்தேகம்னு வந்தா உடனே நாம் தேடுவது கூகுளைத்தான். அப்படி கூகுள் க்ரோம் உலக அளவில் பிரபலமான தேடுபொறியாக இருக்கிறது. தனது பயனர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க கூகுள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அப்படி, தற்போது குரோம் மொழிபெயர்ப்பில் புதிய வசதியை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூகுள் க்ரோமில் தற்போது ஒரு வலைதளத்தில் உள்ள தகவல்களை எந்த மொழியில் வேண்டுமானலும் மொழிபெயர்க்கும் வண்ணம் ஒரு வசதி இருக்கிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு தமிழ் வலைதளப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். அதை வேறொரு மொழியில் மொழிப்பெயர்க்க வேண்டுமானல், அந்தப் பக்கத்தின் வலதுப்பக்கத்தின் மேலே Translate என்ற ஐகான் மற்றும் அதற்கான மொழி காண்பிக்கும். அது முழு வலைதளத்தையே நமக்கு தேவையான மொழியில் மொழிப்பெயர்த்துவிடும். இது தற்போது வரை தொடரும் நடைமுறை.
இந்நிலையில், தற்போது கூகுள் நிறுவனம், தனது பயனர்களுக்கு, ஒரு வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கும் வசதியை அறிமுகம் செய்ய அதற்கான பரிசோதனைகளில் ஈடுபட்டு வருவதாக ரெட்டிட் செய்திதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டால், ஒரு வலைதளத்தில் உங்களுக்கு தேவையான வார்த்தை, வரி உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து அதை மட்டும் மொழிப்பெயர்க்கும் வசதி கிடைக்கும்.
மேலும், குரோம் தளத்தில் கூகுள் டிரான்ஸ்லேசன் செய்வதற்கு தற்போது செட்டிங்ஸ் உள்ளே சென்று அதை மாற்ற வேண்டும்,. ஆனால், புதிய அப்டேட்டில் இது இன்னும் எளிய முறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், கூகுள் பல புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது. கூகுள் மேப் விரைவில் சுங்கக்கட்டணம் குறித்த விவரங்களை தனது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
சோதனை ஓட்டம் :
தற்போது கூகுள் மேப் வாயிலாக சுங்கச்சாவடி கட்டணத்தை அறிந்துகொள்ள உதவும் புதிய வசதி சோதனை ஓட்டத்தில் உள்ளது. முதற்கட்டமாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா பயனாளர்களுக்கு வரவுள்ளது. கிட்டத்தட்ட 2,000 சுங்கச்சாவடிகளின் கட்டண விவரங்களை முதற்கட்டமாக அறிந்துகொள்ள முடியுமாம். ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு முதற்கட்டமாக அறிமுகமாகவுள்ளது. மேலே குறிப்பிட்ட நாடுகள் தவிர்த்து மற்ற நாடுகளுக்கும் விரைவில் அறிமுகமாகும் என கூகுள் மேப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்