கடந்த 25 ஆண்டுகளில் தொழில்நுட்பம் என்பது எவ்வளவு முக்கியமானதாக மாறியது என்பது குறித்து கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பேசியுள்ளார்.
ஒவ்வொரு மனிதனும் தாங்கள் முதலில் பயன்படுத்திய செல்போன், சைக்கிள், பைக் என எல்லாருக்கும் ஸ்பெஷலாகவும், மறக்கமுடியாததாகவும் இருக்கும். அந்தவகையில், கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தனக்கு வந்த முதல் இ-மெயில் குறித்தும், அது யாரிடமிருந்தும் தனக்கு வந்தது என்பதும் குறித்தும் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கூகுள் நிறுவனத்தின் 25ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது, அந்த நிகழ்ச்சியில் பேசிய சி.இ.ஓ சுந்தர் பிச்சை கடந்த 25 ஆண்டுகளில் தொழில்நுட்பம் என்பது எவ்வளவு முக்கியமானதாக மாறியது என்பது குறித்தும், எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பது குறித்தும் பேசினார்.
என்ன பேசினார் சுந்தர்பிச்சை..?
தனது முதல் மெயில் குறித்து பேசிய சி.இ.ஓ சுந்தர் பிச்சை, “நான் அமெரிக்காவில் படித்து கொண்டிருந்தபோது, என்னுடைய அப்பா இந்தியாவில் முதன்முதலாக தனக்கென ஒரு இ-மெயில் ஐடியை உருவாக்கினார். இதன்மூலம், என் அப்பாவுடன் எளிய முறையில் விரைவாக தொடர்புகொண்டு ஏதாவது ஒரு விஷயத்தை தெரிவிக்கலாம் என ஆச்சரியப்பட்டேன். இதையடுத்து, என்னுடைய இ-மெயில் ஐடியை அவருக்கு அனுப்பினேன்.
நானும் அவரிடம் இருந்து மெயில் வந்துவிடும் என்று மிக ஆவலாக இரண்டு நாட்களாக காத்திருந்தேன். ஆனால், இரண்டு நாட்களாக அப்படி எதுவும் வரவேயில்லை. சரியாக மூன்றாவது நாள் என் அப்பாவிடம் இருந்து பதில் மெயில் வந்தது. அதில், ‘அன்புள்ள திரு.பிச்சை, மின்னஞ்சல் கிடைத்தது, அனைவரும் நலம்’ என்று இருந்தது.
வந்த பதில் மெயில் ஏதோ மகனுடன் பேசுவது போல் இல்லாமல், அலுவல் ரீதியாக இருந்ததால் பயந்துபோய் அப்பாக்கு போன் செய்து என்னவென்று கேட்டேன். அப்போது போனில் எனது அப்பா, ‘நண்பரின் அலுவலகத்தில் இருந்து நீ அனுப்பிய மெயில் பிரிண்ட் அவுட் எடுத்து வந்து என்னிடம் கேட்டார். அதை என் அப்பா படித்துவிட்டு, அதற்கு ரீப்ளை செய்வதற்குள் லேட் ஆகிவிட்டது’” என்று தெரிவித்தார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னரே தன் அப்பா தனக்கு இ-மெயில் அனுப்பியதையும், அந்த நாளிலிருந்து தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று பெருமை கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “தொழில்நுட்பத்தை இன்றைய தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிவிரைவாக கற்றுக் கொள்கிறார்கள். வாட்ஸ் மூலம் போன் ஆன் செய்து பேசுவது, ஆடியோ சென்சார் மூலம் காரில் உள்ள பாடலை ஒலிக்கவிடுவது எனனுடைய அப்பாவிற்கு இது மாயாஜாலமாக இருந்ததோ, அதை தற்போது என் மகன் அசால்ட்டாக கையாள்கிறான்” என்று தெரிவித்தார்.