Gmail: கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் சேவையை நிறுத்துவதாக இணையத்தில் தகவல்கள் கசிந்த நிலையில், அந்நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.
ஜிமெயில் சேவை நிறுத்தப்படுகிறதா?
ஜிமெயில் சேவையை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. யூடியூப், கூகுள் குரோம், கூகுள் மேப் போன்ற கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஆப்கள் மட்டுமல்லாமல், ஆதார், பான் கார்டு, வங்கி கணக்கு போன்றவற்றுக்கும் ஜிமெயில் முக்கியமாக தேவைப்படுகிறது.
இதனால், ஜிமெயில் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஜிமெயில் சேவை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதாவது, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஜிமெயில் மூலம் மின்னஞ்சல்களை அனுப்ப, பெற அல்லது சேமிக்க முடியாது என்று ஸ்கிரீன் ஷாட் ஒன்று பரவி வருகிறது.
உலகெங்கும் ஒவ்வொரு நாளும் பல கோடி பயனர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் சேவை நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி பயனர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதே நேரத்தில், நெட்டிசன்கள் பலரும் கூகுள் தனது ஜிமெயில் சேவையை நிறுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி வந்தனர்.
கூகுள் சொன்னது என்ன?
இந்த தகவல் இணையத்தில் கசிந்த நிலையில், கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, "ஜிமெயில் இங்கே தான் இருக்கப்போகிறது" என்று ஒரே வரியில் விளக்கம் அளித்துள்ளது. கூகுள் தரப்பில் இருந்து விளக்கம் வந்த பிறகு பயனர்கள் நிம்மதி அடைந்தனர்.
என்ன காரணம்?
ஜிமெயில் சேவை நிறுத்தப்படுவதாக இணையத்தில் திடீரென தகவல் பரவ காரணம் என்ன என்பது பற்றி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, ”கூகுள் நிறுவனத்தின் அடிப்படை வெர்ஷனான ஹெச்எம்எல் (HTML) வெர்ஷனை மட்டும் நிறுத்த முடிவு செய்துள்ளது.
ஜிமெயிலின் ஹெச்டிஎம்எல் (HTML) பதிப்பு குறைந்த நெட்வொர்க் உள்ள பகுதிகளில் மட்டும் பயன்படுகிறது. எனவே, பயனர்களின் சேவையை மேம்படுத்த ஹெச்டிஎம்எல் வெர்ஷனை (HTML Version) மட்டும் கூகுள் நிறுவனம் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவல்தான் தவறாக, இணையத்தில் ஜிமெயில் சேவையே நிறுத்தப்படுவதாக தகவலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
One Plus 12R: ஒன் பிளஸ் 12ஆர் மாடல் ஆனதா வீண்? ரிட்டர்ன் கொடுத்து பணத்தை வாங்கிக்கோங்க!