முறையான அனுப்புநர்கள் மற்றும் ஸ்பாம் செய்பவர்கள் அனுப்பும் செய்திகளை பயனர்கள் வேறுபடுத்திப் பார்க்க உதவும் வகையில், கூகுள் கடந்த புதன்கிழமை அன்று தனது செய்தி அடையாளத்திற்கான பிராண்ட் குறிகாட்டிகளை (BIMI) ஏற்றுக்கொண்ட ஜிமெயில் பயனர்களுக்கு 'செக்மார்க் ஐகான்களை' அறிமுகப்படுத்தியுள்ளது.
ப்ளூ டிக்
ப்ளூ செக்மார்க் அல்லது ப்ளூ டிக் என்பது பொதுவாக அதிகாரப்பூர்வ கணக்குகள் என்பதை குறிப்பதற்காக சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பொதுவான விஷயம் ஆகும். இது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் இருந்தாலும் ட்விட்டர் தான் இதற்கு பெயர் போனது. ஆரம்பத்தில் ட்விட்டரில் ப்ளூ டிக் வைத்திருந்தவர்கள் பிரபலமாக பலரால் பின்தொடரப்படுபவர்களாகவும், சமூகத்தில் ஏதோ ஒரு துறையில் சிறந்து விளங்கி அதிக பேரால் அறியப்பட்டவர்களாகவும் இருந்தனர். பின்னர் எலன் மஸ்க் வாங்கிய பின் அது வியாபாரமானது. மாதாமாதம் சந்தா கட்டி அதனை யார் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளும் முறை வந்துவிட்டது. தற்போது அந்த வெரிஃபைடு விஷயத்தை கூகுள் தனது ஜி-மெயிலில் கொண்டு வந்துள்ளது பலரையும் திரும்பிப்பார்க்க வைக்கிறது.
ஜிமெயிலுக்கு ஏன் செக்மார்க்?
கடந்த புதன்கிழமை தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவு இடுகையில் இந்த அம்சத்தை கூகுள் அறிவித்தது. அதில், "மின்னஞ்சல் அங்கீகரிப்பு பயனர்களுக்கு ஸ்பேமைக் கண்டறிந்து நிறுத்த உதவுகிறது, மேலும் அனுப்புநர்கள் தங்கள் நம்பிக்கையைப் பயன்படுத்தவும் உதவுகிறது. இது மின்னஞ்சல் மூலங்களில் நம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் வாசகர்களுக்கும் அதிவேக அனுபவத்தையும் அளிப்பதுடன், அனைவருக்கும் சிறந்த மின்னஞ்சல் சூழலை உருவாக்குகிறது" என்று குறிப்பிட்டிருந்தனர்.
எப்படி அணுகுவது?
ஜிமெயிலுக்கு, முந்தைய ஆண்டில் ஒரு பைலட்டைத் தொடர்ந்து 2021-இல் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பாதுகாப்பின் மற்றொரு அடுக்காக செயல்படுகிறது. இந்த ப்ளூ டிக்கை எளிதாக பெற்றுவிட முடியாது, அதைப் பெற, அனுப்புநர்கள் பல கட்ட சரிபார்ப்புகளுக்கு உட்படவேண்டும். மேலும் மின்னஞ்சல்களில் நிறுவனங்கள் அவர்களது லோகோ போன்றவற்றை ப்ரொஃபைலாக வைக்க, அதற்கென தனி செயல்முறை செய்து, தங்கள் பிராண்ட் லோகோக்களை சரிபார்க்க வேண்டும்.
யார் யாருக்கு கிடைக்கும்?
இந்த புதிய அம்சம் ஸ்பாம் மெயில்களில் இருந்து மட்டுமின்றி, BIMI மின்னஞ்சல் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் தூணாக செயல்படுகிறது. ஏமாற்றுகிறவர்கள், ஆன்லைன் ஃபிஷிங் செய்பவர்கள் ஆகியவர்களை மின்னஞ்சல்கள் மூலம் வடிகட்ட உதவுகிறது. கூகுள் புதனன்று செக்மார்க்குகளை வெளியிடத் தொடங்கியது. இந்த அம்சம் முழுவதுமாக எல்லோரையும் சென்று அடைய மூன்று நாட்கள் வரை ஆகும், மேலும் இது Workspace வாடிக்கையாளர்கள், G Suite Basic மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் மற்றும் தனிப்பட்ட Google கணக்குகளைக் கொண்ட எல்லோருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.