உலகப் பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் முக்கிய நாளான இன்று இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை காண மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இந்நிலையில் மதுரை எம்.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (23) கல்லூரி படிப்பை முடித்துள்ள இவர் இன்று கள்ளழகர் வைகையில் இறங்குவதை பார்ப்பதற்காக தனது நண்பர்களுடன் நல்லிரவு வைகை வடகரை பகுதிக்கு வந்துள்ளார்.

 

அப்போது அதிகாலை 4 மணி அளவில் ராமராயர் மண்டகப்படி அருகில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தபோது  கத்தி அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் சிலர் இவர்களை தாக்கியுள்ளனர். அதில்  கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சூர்யா பலியாகி உள்ளார். மேலும் சூர்யாவின் நண்பர்கள் சிலரையும் அந்த அரிவாள்களுடன் வந்த இளைஞர் கும்பல் தாக்கியுள்ளது. பின்பு இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சூர்யாவின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடல் கூர் ஆய்வுக்காக  அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சூர்யாவிடம் வந்த நண்பர்களும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் மது போதையில் அருவாள்களுடன் தாக்கிய இளைஞர் கும்பலில் நால்வரையும் மதிச்சியம் காவல்துறையினர்  காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளழகரை பார்க்க வந்த இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண