சர்வதேச செய்தி ஊடகங்களின் வலைத்தளங்கள், அரசு வலைத்தளங்கள் என அத்தனை இணையதளங்களும்  ஒரு மணி நேரத்துக்கு முடங்கின. அமெரிக்க க்ளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான ஃபாஸ்ட்லி இடந்த முடக்கத்துக்குப் பொறுப்பேற்றுக்கொண்டது. 




இந்த முடக்கத்தால் ரெட்டிட், அமேசான், சி.என்.என், பேபால், ஸ்பாட்டிஃபை, அல்ஜஸீரா, நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட நிறுவன வலைத்தளங்கள் முடக்கத்தைச் சந்தித்ததாக டவுன்டிடக்டர்.காம்(Downdetector.com) கண்டறிந்தது. இதையடுத்து ஃபாஸ்ட்லி(Fastly) இணையதளத்தில் பிரச்னை இருக்கலாம் என அது சொன்னது. சில நிமிடங்கள் தொடங்கி ஒரு மணிநேரம் வரை நீடித்த இந்த முடக்கம் பிறகு சரிசெய்யப்பட்டுவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 






சர்வதேச வலைத்தள  வழங்கு நிறுவனமான (Content Network provider) ஃபாஸ்ட்லி ‘இந்த முடக்கத்துக்கு காரணமாக பிரச்னை கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டுவிட்டது.இருந்தாலும் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியிருப்பதால்  பயனாளர்களின் பழைய தகவல்கள் அதிகம் பதிவேற்றமடைய வாய்ப்புள்ளது’ எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.


பிரான்சின் லே மண்டே (Le Monde) செய்தித்தாள் நிறுவனத்தின் பக்கத்தில் தளத்தில் பிழை இருப்பதற்கான அறிவிப்பு வந்தது (Error Messages). பிரிட்டனின் பிரபல செய்தி நிறுவனமான கார்டியனின் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டுமே இதனால் பாதிக்கப்பட்டது. பிற பிரிட்டன் செய்தி ஊடக நிறுவனங்களும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டன. 






உச்சகட்டமாக பிரிட்டன் அரசாங்கத்தின் இணையதளமே சில நிமிடங்கள் முடங்கியது. வெள்ளைமாளிகை இணையதளத்துக்கும் இதே நிலை ஏற்பட்டது. 


தி பிபிசி மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இணையதளங்களும் முடங்கின. “Error 503 Service Unavailable” மற்றும் “connection failure” போன்ற செய்திகள் அந்தத் தளத்தில் தோன்றின. சி.என்.என் ஊடக இணையதளத்தில் “Fastly error: unknown domain: cnn.com.” என்று தோன்றியது. 


கிட்டத்தட்ட 21000 ரெட்டிட் பயனாளிகள் தங்களது கணக்கு பக்கத்தில் பிரச்னை இருப்பதாகப் புகார் அளித்தார்கள். அமேசான் தளத்தில் சுமார் 2000 பயனாளர்கள் இதுகுறித்துப் புகார் அளித்துள்ளார்கள். சர்வதேச அளவில் பல முக்கிய வலைத்தளங்கள் முடங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.


Also readசென்னை வந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி!