இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில், முதல் 3 இடங்களில் தொடர்ந்து வகித்து வருகிறது வோடாபோன் ஐடியா நிறுவனம். 24 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ள இந்த நிறுவனம், விரைவான இணைய சேவையை வழங்குவதில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. 5ஜி சேவையை வழங்குவதற்கான பணியை அந்நிறுவனம் விரைவுபடுத்தியுள்ளது.


வோடாபோன் நிறுவனம் சேவையை தொடர்வதில் சிக்கல்:


இந்நிலையில், வோடாபோன் ஐடியாவின் உரிமையாளர்களான இங்கிலாந்தை சேர்ந்த வோடாபோன் PLC மற்றும் ஆதித்யா பிர்லா குழுமங்கள், ஜனவரி - பிப்ரவரி காலகட்டத்திற்குள் புதிய முதலீட்டை ஈர்க்காவிட்டால் நிதிச்சிக்கலில் இருந்து மீள்வது என்பது கடினமான காரியமாக இருக்கும் என, மத்திய அரசு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. உரிமையாளர்கள் தங்களது  நிதியை முதலீடு செய்வது உள்ளிட்ட தெளிவான முதலீட்டுத் திட்டத்தை நிறுவனம் மேற்கொண்டால், வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் நிதிச் சிக்கலில்  மாற்றம் நிகழலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


வோடாபோன் - ஐடியா இணைப்பு:


பெரும் இழப்பு மற்றும் சந்தையில் நிலவும் போட்டி காரணமாக வோடாபோன், ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் அண்மையில் இணைந்து வோடாபோன் ஐடியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிய நிறுவனத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்துக்கு 27 சதவீதமும், வோடபோன் நிறுவனத்துக்கு 45 சதவீதமும் பங்குகள் ஒதுக்கப்பட்டன.  ஆனாலும்,. பெரும் கடன் காரணமாக அந்நிறுவனத்தின் நிலை தற்போதும் மோசமாகவே தொடர்கிறது. 


5ஜி அலைக்கற்றை சேவையை வோடாபோன் ஐடியா நிறுவனம் பெற்றிருந்த நிலையிலும் அந்த சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியவில்லை. 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவும், தொடர்ந்து 4ஜி சேவையை வழங்கவும் போதுமான நிதி இல்லையென்ற அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் உடனடி தேவையாக 15,000 முதல் 16,000 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்தது. அதாவது டவர் சேவை வழங்கும் நிறுவனங்கள், பிற சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகையை வழங்குவதற்கு இந்த கடன் கட்டாயம் தேவை என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.


தொடரும் கடன் சிக்கல்:

நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நிதி திரட்ட 2021ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்தில் யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள ரூ.23 ஆயிரம் கோடி கடனுக்கான வட்டி, அசல் என எதையும் திரும்ப செலுத்த முடியாமல் திணறியது.
இதனிடையே, மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைக்கு பதிலாக, நிறுவனத்தின்  35.8% உரிமை அரசுக்கு வழங்கப்பட்டது. இதனல், வோடாபோன் ஐடியா பங்குகள் மத்திய அரசு வசம் 35.8 சதவிகிதமும், வோடபோன் 28.5% பங்குகளையும், ஆதித்யா பிர்லா குழுமம் 17.8% பங்குகளை வைத்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, மத்திய அரசு சுமார் ரூ.10 ஆயிரம் கோடியை வோடாபோன் நிறுவனத்தில் முதலீடு செய்யும் என வெளியான தகவலில், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.


நிதி திரட்ட போராடும் வோடாபோன் நிறுவனம்:

வோடாபோன் ஐடியா நிறுவனம் சுமார் 20,000 கோடி கடன் திரட்ட முடிவு செய்திருந்த நிலையில், வெறும் 5,000 கோடி ரூபாய் மட்டுமே அந்நிறுவனத்தால் பெற முடிந்தது. தற்போது அரசின் வசம் 35 சதவிகித பங்குகள் இருப்பதால், நிதி திரட்டுவதற்கான பணிகளுக்கு இது ஊக்குவிப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 2022ம் ஆண்டு தொடங்கத்தில் இந்நிறுவனம் திரட்டிய ரூ.5,000 கோடியில் பெரும் பகுதி டவர் நிறுவனங்களின் பாக்கியை செலுத்துவதற்கே போதுமானதாக இருந்தது.

நிறுவனத்தின் கடனில் ஒரு பகுதி குறைந்துள்ளதை அடுத்து தற்போது எளிதாக புதிய கடன் வாங்க முடியும் என்று நிறுவனம் நம்புகிறது. 2022 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜீன் வரையான காலக்கட்டத்தில் இருந்த கடன் பாக்கி தற்போது 15,080 கோடியாக குறைந்துள்ளது. இதையடுத்து நிறுவனத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக  அண்மையில், பாரத ஸ்டேட் வங்கியில்  ரூ.16,000 கோடி  கேட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.