முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்கள் அனைத்தும் விழாக்காலத்திற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில், பல்வேறு போலியான மோசடி ஆன்லைன் விற்பனை தளங்கள் தங்கள் வேலையைத் தொடங்கியுள்ளன. நாடு முழுவதும் இந்த மோசடி தளங்கள் ஸ்மார்ட்போன் துணைக்கருவிகள் முதல் விலையுயர்ந்த வாட்ச்கள் வரை விற்பனை செய்வதாகக் கூறுகின்றன. நாட்டின் சைபர் பாதுகாப்புத்துறையினர் அப்பாவி மக்கள் இப்படியான மோசடியான தளங்களில் மக்கள் சிக்கி ஏமாறுவது குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருப்பது கவலைக்குரியது.


wellbuymall.com என்ற இப்படியான மோசடி விற்பனைத் தளம் ஒன்று, ஆயிரக்கணக்கான இந்தியர்களைப் பணம் பெற்று ஏமாற்றியுள்ளது. இந்தத் தளம் தற்போது இயங்குவதில்லை என்ற போதும், இது பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு டெக்னாலஜி சார்ந்த பொருள்கள் விற்பதாகக் கூறி, பணம் செலுத்தியவுடன் தளமே காணாமல் போயுள்ளது. 


சுதீப் வர்மா என்ற பாதிக்கப்பட்டவர் இதுகுறித்து கூறும்போது, `நான் ஆர்டர் செய்தேன்; பணம் செலுத்தினேன். அதன்பிறகு எந்தப் பதிலும் வரவில்லை. ஆர்டரும் எனக்கு வந்து சேரவில்லை. இந்த இணையதளம் போலியானது’ எனக் கூறியுள்ளார். சுனில் குப்தா என்ற மற்றொரு நபர் தானும் பாதிக்கப்பட்டதாகக் கூறியதோடு, இந்தத் தளத்தை பேஸ்புக்கில் கண்டு, அதனைப் பின்தொடர்ந்ததாகக் கூறியுள்ளார்.



குர்கான் பகுதியைச் சேர்ந்த ஆயுஷ் என்பவர் மொபைல் ஃபோன் சார்ஜர் வாங்குவதற்காக இந்தத் தளத்தில் சுமார் 1668 ரூபாய் செலவு செய்துள்ளார். அவர் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தவுடன், இந்தத் தளத்திற்கு எதிராக குருகிராம் சைபர் செல்லில் புகார் அளித்துள்ளார். 


பல்வேறு மக்களை மோசடி செய்த இந்த இணையதளம் தற்போது சீன மொழியில் வெப்சைட் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இந்தத் தளத்தை நடத்தியவர்கள் பேஸ்புக்கில் விளம்பரங்களை வெளியிட்டு, அதனால் ஈர்க்கப்பட்டு வந்தவர்களை, இந்தத் தளத்திற்குள் வரவழைத்து, பணம் பெற்று ஏமாற்றியுள்ளனர். தங்கள் ஆர்டருக்கான பணத்தொகை வந்தவுடன், தங்கள் பொருள்களை டெலிவரி செய்வதைத் தாமதித்து, பேஸ்புக் இந்தத் தளத்தைப் போலியானது என்று குறிப்பிடும் முன்பே பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். 



சைபர் பாதுகாப்பு நிபுணர் ராஜசேகர் ராஜஹரியா, `நுகர்வோரின் கருத்துகளைப் பெறுவதில் பேஸ்புக் நிறுவனர் தாமதம் காட்டுவதில், தகுதியற்ற மோசடியான தளங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றால் தடைசெய்வதற்கு முன்பே பணம் ஈட்டித் தப்பிக்கின்றன’ என்று சமூக வலைத்தளங்களின் மெத்தனம் குறித்துக் கூறியுள்ளார். 


தங்கள் விற்பனைத் தளத்திற்கு மக்கள் வருவதற்காக, அதிக பணம் செலவு செய்து பேஸ்புக் போன்ற தளங்களில் விளம்பரம் செய்கின்றன. இதுபோன்ற போலியான தளங்களில் பணம் செலவு செய்து ஏமாறாமல் இருப்பதற்கான ஒரே வழி அமேசான், ஃப்ளிப்கார்ட், மிந்த்ரா முதலான பிரபலமானதும், பாதுகாப்பானதுமான இணையதளங்களில் பொருள்களை வாங்குவது மட்டுமே என்று ராஜசேகர் ராஜஹரியா குறிப்பிட்டுள்ளார்.