பேஸ்புக்கின் துணைநிறுவனமான வாட்சப் சாட் மெசெஞ்சர் பல புதிய அப்டேட்களை தனது சாட்டி வசதியில் வாடிக்கையாளர்களுக்காகக் கொண்டுவர உள்ளது. ஸ்டிக்கர்களை வெறுமனே காப்பி பேஸ்ட் செய்வது, வீடியோ பார்த்தபடியே சாட் செய்வது உள்ளிட்ட சில சர்ப்ரைஸ் அப்டேட்களும் அடக்கம். இதுதவிர, இமேஜ் அல்லது வீடியோக்களை எடிட் செய்வதில் அதிருப்தி ஏற்பட்டால் அதனை திருத்துவதற்கான பட்டன், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கின் சாட் வசதிகளில் இருப்பதுபோல ரியாக்ஷன் எமோஜிக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பிரைவசி செட்டிங்களும் இதில் அடக்கம்.
முன்னதாக, மேலும் பல புதிய அப்டேட்களை வாட்சப் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தியிருந்தது. மறைந்து போகும் வாட்சாப் மெசேஜ்களின் காலத்தை நீட்டிக்கப் போவதாக வாட்சாப் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன.. 90 நாட்கள் வரை வாட்சாப் மெசேஜ்களை மறைந்து போகச் செய்யும் வசதியை வாட்சப் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இவ்வாறு 90 நாட்களில் மெசேஜ்கள் மறைந்து போவதால், பயன்படுத்துவோரின் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் பாதுகாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு, வாட்சாப் செயலியில் மெசேஜ்கள் மறைந்து போகும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைக் கடந்தவுடன், பயன்படுத்துவோரின் ஒப்புதல் இல்லாமலே, அவர்களது மெசேஜ்களை அழிக்கும் வசதியாக இது இருக்கிறது. தற்போது இதன் கால அளவு 7 நாட்களாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது, இந்த வசதியை வாட்சப் பயன்படுத்துவோர் பயன்படுத்தினால், 7 நாட்களில் அவர் அனுப்பிய மெசேஜ்கள் அனைத்தும் அழிந்துவிடும். இது அறிமுகப்படுத்தியது முதல், இதன் கால அளவு 7 நாட்கள் என்றே குறிப்பிடப்பட்டு வந்தன. தற்போதைய தகவல்களின் படி, அடுத்து வரப்போகும் வாட்சப் வெர்ஷன்களில், இந்தக் கால அளவு 90 நாட்கள், 7 நாட்கள் மற்றும் 24 மணி நேரங்கள் என ஆப்ஷன்களாக அளிக்கப்படவுள்ளன.இதன் மூலம், வாட்சாப் மெசேஜ்களை மறைந்து போகச்செய்யும் வசதியை 24 மணி நேரங்களுக்குள் குறைத்து வைக்கும் வசதியும் வெளியாகவுள்ளது தெரிய வந்திருக்கிறது. கடந்த மாதம், மெசேஜ்களை மறையச் செய்யும் வசதியில் ஒரு பகுதியாக, படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை ஒரு முறை மட்டுமே பார்க்கும் அம்சமும் வெளியானது.
இதன் மூலம், நாம் ஒரு படத்தையோ, வீடியோவையோ மற்றொருவருக்கு அனுப்பும் போது, 'View Once' என்று குறிப்பிட்டால் நாம் அனுப்பியதைப் பெறுபவர் அதனைப் பார்த்தவுடன் அது அழிந்துவிடும். இதே அம்சம் இன்ஸ்டாகிராம் செயலியில் பிரசித்தி பெற்ற ஒன்று. அதன் தொடர்ச்சியாகத் தற்போது வாட்சப் செயலியும் இதே வசதியைப் பின்பற்றி வருகிறது.View Once அம்சத்தைப் பயன்படுத்தும்போது, அதனைப் பெறுபவர் அதனை 14 நாள்களுக்குள் திறக்காவிட்டால் அது அழிந்துவிடும். அப்படி அனுப்பப்படும் மெசேஜை பார்வார்ட் அனுப்புவதோ, அதை சேவ் செய்யவோ, ஷேர் செய்யவோ, ஸ்டார் மார்க் செய்யவோ முடியாது. எனினும் அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக் கொள்ள முடியும்.
90 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் இந்த வசதியைத் தற்போது Beta versionகளில் வாட்சாப் நிறுவனம் பரிசோதித்து வருகிறது.