கடந்த மே 3 அன்று, ட்விட்டர் பதிவு ஒன்றில் எலான் மஸ்க், ட்விட்டர் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு எப்போதும் இலவசமாக வழங்கப்பட்டாலும், வர்த்தக காரணங்களுக்காகவும், அரசுகளுக்கும் ட்விட்டர் பயன்படுத்துவதற்குச் சிறிய கட்டணத்தைப் பெற போவதாக அறிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வெகுசில அமெரிக்கர்கள் மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில், அதனைப் பலதரப்பட்ட அமெரிக்க மக்களும் பயன்படுத்தும் விதமாக மாற்றும் முயற்சியில் எலான் மஸ்க் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
`சாதாரண பயனாளர்களுக்கு ட்விட்டர் எப்போது இலவசமாகவே அளிக்கப்படும். எனினும், வர்த்தகப் பயன்களுக்காகவும், அரசுகளுக்காகவும் சிறிய கட்டணம் அறிமுகப்படுத்தப்படலாம்’ என ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் எலான் மஸ்க்.
இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் தரப்பில் எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.
கடந்த மாதம் முதல், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் தளத்திற்குப் பல்வேறு புதிய மாற்றங்களை மேற்கொள்ள பரிந்துரைகளை அளித்து வருகிறார். சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், ட்விட்டர் தளத்தில் புதிய சிறப்பம்சங்களைச் சேர்க்க விரும்புவதாகவும், அதன் தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்தும் விதமாக மாற்றி, மக்களின் நம்பிக்கை பெறுவது, மோசடி செய்யும் போட்களை நீக்குவது, அனைத்து மனிதர்களுக்கும் அங்கீகாரம் வழங்குவது முதலானவற்றை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
கடந்த மாதம், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பாகவே, எலான் மஸ்க் முன்வைத்திருந்த பரிந்துரைகளுள் ட்விட்டர் ப்ளூ ப்ரீமியம் சேவையைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமெரிக்காவின் நியூ யார்க்கில் மெட் காலா நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றுவதோடு, அதன் மென்பொருளை விமர்சனம் செய்வதற்காக அனைவரும் பயன்படுத்தும் விதமாக மாற்றவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், அதன் பங்குதாரர்கள், கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோரின் ஒப்புதல்களைப் பெற்று இந்த ஆண்டின் இறுதிக்குள் அதன் முழு பொறுப்பையும் ஏற்பார் எனக் கூறப்படுகிறது. தற்போது பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்படும் அதன் பங்குகள் அனைத்தையும் எலான் மஸ்க் வாங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம், தனது டெஸ்லா நிறுவனத்தில் இருந்து சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்த எலான் மஸ்க், அந்தப் பணத்தின் மூலம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவுள்ளார் எனக் கூறப்பட்டது.