டெஸ்லா நிறுவனம் 2008ம் ஆண்டு எலன் மஸ்க் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் அண்மைக்காலமாக தானியங்கி கார் தயாரிப்பில் வெகு பிரபலமாகி வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளின் உச்சமாக தானியங்கி வாகனங்கள் பார்க்கப்படுகிறது. விமானம், கப்பல், ரயில் போன்ற பல போக்குவரத்துக்கு வாகனங்கள் பல ஆண்டுகளாக தானியங்கி முறையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மக்களின் அன்றாட பயன்பாட்டில் இந்த தானியங்கி கார்களின் ஆதிக்கம் தற்போது அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. இதில் தானியங்கி கார் தயாரிப்பில் டெஸ்லா நிறுவனம் முன்னோடியாகவே திகழ்கிறது. தானியங்கி, எலக்ட்ரிக் என இரண்டையும் ஒருசேர தயாரிக்கும் டெஸ்லா, எதிர்காலத்தை நோக்கியே பயணித்து வருகிறது.




இந்நிலையில் தன்னுடைய அடுத்த திட்டத்தை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளார் எலன் மஸ்க். அது வேறு ஒன்றுமில்லை, மனித வடிவிலான ரோபோ தான். எந்திரன் படத்தில் வரும் ரோபோவைப் போல டெஸ்லா இப்போது ரோபோ தயாரிப்பில் இறங்கியுள்ளது. டெஸ்லா போட் என்று அழைக்கப்படும் ரோபோவின் கான்செப்டை டெஸ்லா ஏஐ டே விழாவில் அறிமுகப்படுத்தி பேசினார் டெஸ்லாவின் நிறுவனர் மஸ்க். 


5 அடி 8 அங்குலம் உயரம், 125 பவுண்ட் எடை கொண்டதாகவும் இந்த ரோபோ இருக்கும். மணிக்கு 5 மைல் வேகத்தில் நடக்கவும், சுமார் 45 பவுண்ட் எடையை சுமக்கும் திறனையும் இந்த ரோபோ கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது




ஹுயூமனாய்ட் ரோபோவாக இது இருக்குமென டெஸ்லா போட் குறித்து பேசிய மஸ்க், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த ரோபோ மனிதர்களின் வழக்கமான பணிகளுக்கு உதவி செய்யும் எனத் தெரிவித்தார். மனித ரோபோ என்றதும் எந்திரன் படத்தில் வருவது போல கண், மூக்கு, வாய் எல்லாம் இதற்கு இருக்காது. முகத்தில் முழுவதும் செல்போன் டிஸ்பிளே போல தொடுதிரை டிஸ்பிளேவும் கேமராவும் தான் கொடுக்கப்பட்டிருக்கும். மனிதர்களுடன் தொடர்பில் இருக்க இந்த டிஸ்பிளேவும், கேமராவுமே பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.


இந்த ரோபோ குறித்து மேலும் பேசிய மஸ்க், '' தற்போது கான்செப்ட் வடிவில் தான் இந்த ரோபோ தயாரிப்பு உள்ளது. கடைக்குச் சென்று மளிகைப் பொருட்கள் வாங்குவது போன்ற மனிதர்களுக்கு சலிப்பு தரக்கூடிய வேலைகளை இந்த ரோபோ செய்யும். எதிர்காலத்தில் உடல் உழைப்பு என்பது உங்களுக்கான சாய்ஸாகவே இருக்கும். ஒரு வேலையை நீங்கள் செய்ய நினைத்தால் செய்யலாம். ஆனால் அதை நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்ற நிலை உருவாகும் எனக் குறிப்பிட்டார். குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதும், அதற்கு ஹுயூமனாய்ட் ரோபோக்கள் பெரும் அளவில் கைகொடுக்கும் என்பதை தீர்க்கமாக நம்புகிறார் மஸ்க்.  ஆட்டோமேட்டிக் கார் தயாரிப்பில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் டெஸ்லா, ஹுயூமனாய்ட் ரோபோ தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்தும் என்றே தெரிகிறது. ஒரே இரவில் நடக்க முடியாத விஷயம் என்றாலும், இதுதான் எதிர்காலம் என தன்னுடைய முன்னெடுப்பை தொடங்கி இருக்கிறது டெஸ்லா. 




இந்த உலகம் மனிதர்களால் மனிதர்களுக்காகவே உருவாக்கப்படுகிறது என்ற டேக் லைனுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டெஸ்லா போட், மனிதர்களின் இடத்தை நிரப்பிவிடக் கூடாது என்பதே சிலரின் கருத்தாகவும் இருக்கிறது. மனிதர்களுக்காக ரோபோ என்ற பயன்பாடு வருவது வரவேற்க வேண்டியது என்றாலும், மனித உழைப்பையும், மனிதர்களின் வேலையையும் ரோபோக்களே கையகப்படுத்தும் நிலை வந்தால் அது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சூனியம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.


Car loan Information:

Calculate Car Loan EMI