உலகின் முதல் பிட்காயின் நகரத்தைக் கட்டுவதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது எல் சால்வடோர் நாடு. அந்நாட்டின் அதிபர் நயீப் புகெல் பிட்காயின் பத்திரத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வைத்து இந்த நகரத்தைக் கட்டுவதற்காகத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். 


வரும் 2022ஆம் ஆண்டு, நயீப் புகெல் இந்த பிட்காயின் பத்திரத்தை வெளியிடவுள்ளதாகவும், அடுத்த 60 நாள்களில் இது தயாராகி விடும் எனவும் கூறியுள்ளார். இந்த 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுள் பாதி பிட்காயினாக மாற்றப்படும் எனவும், மற்றொரு பாதி கட்டமைப்புகளுக்காகவும், பிட்காயின் மைனிங்கிற்காகவும் பயன்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். 


பிளாக்ஸ்ட்ரீம் என்ற பிளாக்செயின் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை அதிகாரி சாம்சன் மோவ் இதுகுறித்து நயீப் புகெல் பேசிய போது அவருடன் மேடையில் இருந்தார். சாம்சன் மோவ் இதுகுறித்து பேசிய போது, இந்தப் புதிய நகரம் அருகில் இருக்கும் எரிமலையில் இருந்து எடுக்கப்படும் ஆற்றலின் மூலம் இயக்கப்படும் எனவும், இதில் அமெரிக்க டாலர்களால் நிர்ணயிக்கப்பட்ட பத்தாண்டுக் கால பணப் பத்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். இது 6.5 சதவிகித தள்ளுபடி கூப்பனுடன் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 



நயீப் புகெல்


 


தற்போது எல் சால்வடோர் நாட்டின் பத்தாண்டுக் காலப் பணப் பத்திரங்களின் வட்டி விகிதத்தை விட இது சுமார் 13.5 சதவிகிதம் குறைவு. மேலும், எல் சால்வடோர் அதிபர் நயீப் புகெல் கடந்த ஜூன் மாதம் பிட்காயின் பரிவர்த்தனைகளைச் சட்டப்பூர்வமாக மாற்றிய பிறகு, பல்வேறு உயர்தர முதலீட்டாளர்கள் மிகவும் பாதுகாப்பான அமெரிக்க அரசுப் பணப் பத்திரங்களை விட எல் சால்வடோர் பத்திரங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.


பிட்காயின் அடிப்படையிலான புதிய பத்திரங்கள் மேலும் திட்டமிடப்பட்டு வருவதாகவும், பிற நாடுகளும் இதனைப் பின்பற்ற வேண்டும் எனவும் சாம்சன் மோவ் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம், க்ரிப்டோ பணப் பரிவர்த்தனையின் மதிப்பு அதிகரிக்கும் எனவும் அவர் கணித்துள்ளார். இதன்மூலம், எல் சால்வடோர் அரசு மீண்டும் பிட்காயின் விற்பனையைத் தொடங்கும் போது, பணப் பத்திரங்களை லாபத்துடன் கட்டுவதற்கு உதவிகரமாக அமையும். 


முதல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, எல் சால்வடோர் அரசால் மேலும் சில பிட்காயின்களை விற்று முதலீட்டாளர்களுக்குக் கூடுதல் கூப்பன்களை ஒவ்வொரு ஆண்டும் வழங்கவும் முடியும் எனவும் சாம்சன் மோவ் தெரிவித்துள்ளார். 



Bitfinex என்ற க்ரிப்டோ பரிவர்த்தனை நிறுவனம் இந்தப் பணப் பத்திரங்களைக் கையாளும் நிறுவனமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 அமெரிக்க டாலர் மதிப்பிலான பணப் பத்திரங்கள் விற்கப்பட்டு, அனைவரும் வாங்குவதற்கு வழி செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 


எல் சால்வடோர் நாடு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்த்து வரும் சூழலில், எல் சால்வடோர் புதிதாக அறிவித்திருக்கும் இந்தத் திட்டம் குறித்து இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் எல் சால்வடோர் பிட்காயினைச் சட்டபூர்வமாக அங்கீகரித்த போது, அது குறித்து பொருளாதார ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஆட்சேபனை இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் கருத்து தெரிவித்திருந்தது.