ஒரு செய்திகளையோ , தகவல்களையோ’ நச்’ என்று சுருக்கமாக சொல்ல வேண்டும் என விரும்புவர்களின் தேர்வு ட்விட்டராகத்தான் இருக்கும் . டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைக்கு மாறியதற்கு பிறகு நிறைய மாற்றங்களை , அந்த தளம் சந்திக்கும் என்பது நாம் எதிர்பார்த்ததுதான். அவ்வபோது எலான் மஸ்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து சில மாற்றங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்  தற்போது டிவிட்டர் சர்கிள் என்னும் புதிய வசதியை அறிமுகப்படுதியுள்ளது. ட்விட்டர் சர்கிள் என்பது , இன்ஸ்டாகிராமில் உள்ள   ”closed circle " என்னும்  வசதியை போன்றதுதான். இதன் மூலம் பயனாளர்கள் பதிவிடும் ட்வீட்டை நெருங்கிய நண்பர்களுக்கோ அல்லது சம்மந்தப்பட்டவர்களுடனோ மட்டுமே பகிர்ந்துக்கொள்ள முடியும்.







ட்விட்டர் சர்கிள் வசதி மூலம் பதிவிடும் ட்வீட்களை, ஃபாலோவர்ஸாக இருந்தாலும் கூட ,  அந்த வட்டத்தில் இல்லாத நபர்கள் பார்க்க முடியாது.தற்போது சோதனை முயற்சில் இருக்கும் இந்த வசதியானது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக பயனாளர்கள் 150 பேர் வரையிலும் ட்விட்டர் சர்கிளில் இணைத்துக்கொள்ள முடியும். இது குறித்து ட்விட்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “சில ட்வீட்கள் அனைவருக்குமானவை, மற்றவை நீங்கள் தேர்ந்தெடுத்த நபர்களுக்கு மட்டுமானது. நாங்கள் இப்போது  ட்விட்டர் சர்கிள் வசதியை சோதித்து வருகிறோம், இதன் மூலம் நீங்கள் ஒரு சிறிய குழுவுடன் தகவல்களை பகிர்ந்துக்கொள்ளலாம் .  இதில் 150 பேர் வரையில் சேர்த்துக்கொள்ளலாம்.” என தெரிவித்துள்ளது.







முன்னதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில்  “ ட்விட்டரை பயன்படுத்துவதற்கு இனிமேல் விளம்பர மற்றும் அரசு நிறுவனங்களுக்கு சிறு தொகை கட்டணமாக வசூலிக்கப்படும் . ஆனால் சாதாரண பயனாளர்கள் வழக்கம் போல இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிவித்திருந்தார். எலான் மஸ்கின் சில அதிரடி வசதிகள் மற்றும் அடுத்தடுத்த நகர்வுகள் பயனாளர்களை கூர்ந்து கவனிக்க வைப்பதாக அமைந்திருக்கிறது.