ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில், பவர்ப்ளே முடிவதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது. கேப்டன் பண்ட் அணியை கரை சேர்ப்பார் என எதிர்ப்பார்த்தபோது 26 ரன்கள் எடுத்து அவரும் அவுட்டாக, பவல் களமிறங்கினார். விக்கெட்டுகள் சரிந்தாலும், தனது ஆட்டத்தில் மாறாது அதிரடி காட்டி வந்த வார்னர் 3 சிக்சர்கள், 12 பவுண்டரிகள் என வெளுத்து வாங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த பவல், 6 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 67 ரன்கள் எடுத்து வார்னருடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வார்னர் 92 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி 207 ரன்கள் எடுத்தது
200+ ரன்களை சேஸ் செய்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு, மார்க்கரம், நிக்கோலஸ் பூரன் தவிர மற்ற வீர்ர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். டெல்லி அணி பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை கலீல் அகமது 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும், நார்ஜே, மிட்சல் மார்ஷ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி. இலக்கை சேஸ் செய்ய தவறிய ஹைதராபாத் அணி தோல்வியைத் தழுவி இருக்கிறது.
இதனால், இந்த போட்டியின் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் ஐந்தாவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறாவது இடத்திலும் உள்ளது. இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும். இதனால், ஐபிஎல் லீக் போட்டிகள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்