டூல் கிட் தொடர்பான வழக்கில் ட்விட்டர் இந்தியா அலுவலகத்துக்கே நேரில் சென்று டெல்லி போலீஸ் நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. ஆனால், ட்விட்டர் இந்தியா டெல்லி அலுவலகங்களில் போலீஸ் ரெய்டு நடத்தியதாகத் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்நிலையில், கடந்த குடியரசு தின நிகழ்ச்சியின்போது டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடிக்க, காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டதாக டெல்லி போலீஸார் குற்றம்சாட்டினர். அதுவும் குறிப்பாக, ட்விட்டரில் உலவிய டூல்கிட்டை இதற்கு ஆதாரமாக போலீஸார் தெரிவித்தனர்.





அது என்ன டூல்கிட்?


மத்திய வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் சமூக வலைதளங்களில் என்ன மாதிரியான ஹேஷ்டேக் உருவாக்க வேண்டும், எப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும், போராடும் விவசாயிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டும்? என நீண்ட விவரங்கள் அடங்கியதுதான் டூல்கிட். அந்த டூல்கிட்டை பகிர்ந்துதான் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். இந்த டூல்கிட்டை பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் திஷா ரவி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததால், அவர் கைது செய்யப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.



போலீஸ் நோட்டீஸ்..
முன்னதாக டூல்கிட் சர்ச்சையில், சம்பித் பாத்ரா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பதிவிட்ட ட்வீட்களில் "சந்தேகத்துக்கிடமானது" என்ற ரீதியில் 'manipulation media' என ட்விட்டரை (Twitter) டேக் செய்தனர். இதற்கு விளக்கம் அளிக்குமாறு, டெல்லி காவல்துறை ட்விட்டர் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பிது. ஆனால், அதற்கு எவ்வித பதிலும் இல்லை.  இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக நேற்று டெல்லி லாடோ சராய் மற்றும் குருகிராம் அலுவலகங்களுக்கு நேரில் சென்று நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம், "சிறப்பு விசாரணைக் குழு ட்விட்டர் இந்தியாவுக்கு நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. பதிலுக்கு ட்விட்டர் நிறுவனமோ, இவ்விஷயத்தில் பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை எனக் கூறிவிடவே, அலுவலர்கள் ட்விட்டர் நிறுவனத்துக்கே நேரில் சென்று அலுவலர்களின் கருத்தை பதிவு செய்ய முற்பட்டிருக்கிறது. ஆனால், அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அதனால், அதிகாரிகள் திரும்பிவிட்டனர்" எனத் தெரிவித்திருக்கிறது.
அதேவேளையில், டெல்லி போலீஸார் வெளியிட்ட அறிக்கையில், ட்விட்டர் அலுவலகத்துக்கு சென்றது வழக்கமான விசாரணை நடைமுறையே. அங்கே எவ்வித சோதனையும் செய்யப்படவில்லை. டூல்கிட் வழக்கில் நோட்டீஸை யாருக்கு வழங்க வேண்டும் என்பது பற்றி ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர் எங்களுக்குத் தெளிவுபடுத்தாதாலேயே நாங்கள் அங்கு சென்றோம் என விளக்கப்பட்டுள்ளது.