சமீப காலங்களாக உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சைபர் க்ரைம் குற்றவாளிகள் தற்போது கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை குறி வைக்க தொடங்கியுள்ளனர். இதற்காக சில புதிய கணினி  வைரஸ்களை அவர்கள் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.


 


இந்நிலையில் கிரிப்டோ கரன்சி வேலட்களை குறிவைக்கும் வகையில் புதிய வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரபல கணினி வைரஸ் தடுப்பு மென்பொருள் பிட்டிஃபெண்டர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, “ ‘BHUNT’ என்ற புதிய வகை வைரஸ் தற்போது சில கணினிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸின் ஒரே நோக்கம் கிரிப்டோ கரன்சி வேலட்களை குறி வைப்பது தான். இந்த வகை வைரஸ் பிட்காயின், எதிரியம்,அடோமிக், எக்ஸோடஸ் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி வேலட்களை பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது. 


 


இது ப்ரேடட் மென்பொருள் மற்றும் டார்ன்ட்ஸ் பதிவிறக்கம் ஆகியவற்றின் மூலம் கணினிக்குள் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒருவரின் கணினிக்குள் வந்த பிறகு அவர்களுடைய கிரிப்டோ கரன்சி வேலட்டிலிருந்து மற்றொருவருக்கு வேகமாக கரன்சியை மாற்றும் திறன் கொண்டுள்ளது. கிரிப்டோ கரன்சி வேலட் தவிர இது கணினியில் உள்ள சில பாஸ்வேர்டு போன்ற சில தகவல்களையும் திருடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. 




மேலும் இந்த வைரஸை எளிதாக கண்டறிவது கடினம் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த வைரஸ் ஒரு உண்மையான மென்பொருள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதை சில வைரஸ் தடுப்பு மென்பொருள்கள் அறிவது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 


கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளில் செய்து முடிக்கப்படாத பரிவர்த்தனைகள் வேலட்களில் ஸ்டோர் ஆகி இருக்கும். அதை நாம் நம்முடைய பிரைவேட் கீ மூலம் பயன்படுத்த முடியும். அந்த பிரைவேட் கீயை இந்த வைரஸ் கணினி மூலம் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் இந்திய கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


 


முன்னதாக ஸ்பைடர்மேன் திரைப்படத்தை டாரன்ட் மூலம் பதிவிறக்கம் செய்த சிலரின் கணினியில் சில வைரஸும் சேர்ந்து பதிவிறக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் டாரன்ட் மூலம் புதிய வகையில் வைரஸ் ஒன்று கணினிக்குள் ஊடுறுவும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ஆண்ட்ரய்டு டு ஐபோன் பயன்பாட்டாளர்களே... வாட்ஸ்-அப்பில் இருந்து ஒரு முக்கிய அப்டேட்