கொரோனா பேரிடர் காலக்கட்டம் பல்வேறு துறைகளின் நிலையை மாற்றியமைத்துவிட்டது. சில துறைகள் கடும் வீழ்ச்சியை கண்டிருந்தாலும், சில துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. அதில் ஒன்றுதான் மொபைல் கேமிங் நிறுவனங்கள். கொரோனா ஊரடங்கால் இளசுகள் பலரும் பொழுதுபோக்கிற்காக  மொபைல் கேம்ஸ் விளையாடுவதில் ஆர்வம் செலுத்தியதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து தனியார் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் கேம்ஸ் விளையாடும் 17 வயது முதல் 24 வயதிலான 2,134 மாணவர்கள் பங்கேற்றனர்.  1,222 பெண்கள் மற்றும் 910 ஆண்கள் பங்கேற்ற அந்த ஆய்வின் முடிவில் இந்திய கேமிங் துறையானது நிலையான மாற்றங்கள் மற்றும் வளர்சியை கண்டிருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக கொரோனாவிற்கு முன்பு இருந்த சூழலை ஒப்பிடும் பொழுது விட பன்மடங்கு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.



கணினி மற்றும் மொபைல் என இரண்டு சாதனங்களில் எந்த சாதனத்தை கேம்ஸ் விளையாட  பயன்படுத்துகிறார்கள் என்ற அடிப்படையில் மேற்க்கொண்ட ஆய்வில் , 85% இளைஞர்கள் மொபைல் கேம்ஸ் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டி வருவது தெரிய வந்துள்ளது.அதில் 20% பேர் ஃபேண்டஸி எனும் கற்பனை கதாப்பத்திரங்கள் அடங்கிய கேம்ஸ் விளையாடுவதில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண மற்றும் அமெச்சூர் விளையாட்டுகளில்  சுமார் 80% பேர் நாட்டமாக உள்ளனர்.இவ்வகை விளையாட்டுகளை எப்போது வேண்டுமானாலும் விளையாட முடியும். இதற்கு கட்டணமோ, குறிப்பிட்ட நேரமோ கிடையாது. உதாரணத்திற்கு க்ளாஸ் ஆஃப் க்ளான்ஸ் போன்ற விளையாட்டை கூறலாம்.


 




மிகவும் எளிமையாக புரிந்துக்கொள்ளும் வகையில் இருக்கும் லூடோ போன்ற ஃபோர்ட் வகை விளையாட்டுகள் , ஆர்கேட் கேம்ஸ், யுத்தகள விளையாட்டுகளே இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.ஒரு ஆண்டில்  14 சதவிகித பேர் மட்டுமே சராசரியாக 500 ரூபாய் செலுத்தி,கட்டண கேமில் ஈடுபடுகிறார்கள் . பெரும்பான்மையான இளைஞர்கள் கேமிஸ்களில் செலவழிப்பதில் விருப்பமில்லை என்றே தெரிவிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏதேனும் ஒரு  கேம் டவுன்லோட் செய்து, கேமிங் உலகிற்குள் வரும்  இளைஞர் ஒருவர் ,யூடியூப் தளத்தின் மூலமாகவே விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக்கொள்கிறாராம்.  இதற்காக நிறைய யூடியூப் சேனல்கள் உருவாக்கப்படுள்ளது. குறிப்பாக சேனல் தொடங்கியிருக்கும் நபர்களில் 10 சதவிகிதம் பேர் பிரபல PUBG மற்றும் கால் ஆஃப் டூட்டி போன்ற விளையாட்டுகளை பணம் ஈட்டுவதற்காக மட்டுமே விளையாடி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது  Gen Z  என்ற யூடியூப் சேனல் விளையாட்டு நுணுக்கங்களை பகிர்ந்து அதிக வருமானத்தை ஈட்டி வருவதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.



தொழில்நுட்ப மாற்றத்தை சந்தித்து  வரும் கேமிங் நிறுவனங்கள் , இளைஞர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல மாறுதல்களை கையாண்டு வருகின்றனர். எனவேதான் பலரும்  கணினியில் விளையாடும் கேம்ஸை விட மொபைல் கேம்ஸில் நாட்டம் செலுத்துகின்றனர்.இன்றைய தொழில்நுட்ப வளர்சி கேம் விளையாடும் நபரை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச்செல்கிறது. காட்சிகள், ஒலி, ஒளி அமைப்புகள், கேம் வழியாக  கூறப்படும் செல்லும் கதைகள், உரையாடல் நிகழ்த்தும் அம்சங்கள் போன்றவையே மொபைல் கேம் வளர்சிக்கு முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகிறது. மேலும் இதனை தக்க வைத்துக்கொள்ள ஆண் , பெண் என இருபாலினர்களின் கேமிங் விருப்ப தேர்வை அறிந்து கேமிங் நிறுவனங்கள் அவர்கள் ஊடாகவே பயணிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.