தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவைக் கடந்த 7-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டதை அடுத்து 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர் பெரிய கருப்பன், தாமோ அன்பரசன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். முதலமைச்சர் ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்’ எனக் கூறிப் பதவியேற்றுக் கொண்டார்.
அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், மதிவேந்தன் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கொரோனா பாதிப்பு காரணமாகக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தி.மு.க.விலிருந்து பதவியேற்றுக் கொண்ட உறுப்பினர்கள் உளமார என உறுதி கூறியும், அ.தி.மு.க.விலிருந்து பதவியேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட உறுப்பினர்கள் ’கடவுள் அறிய’ என உறுதிகூறியும் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.