செவ்வாய் கிரகத்தில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் விண்வெளி அறிவியலில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது சீனா. 

"நிஹாவோ மார்ஸ்" என்ற பெயரில் மூன்று மாதங்களுக்கு முன்னதாக சீனா, செவ்வாய் கிரகத்தில் தனது தியான்வென் 1 விண்கலம் மூலம் ரோவரை தரையிறக்கும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது. 

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சிஎன்எஸ்ஏ  (CNSA) சீன தேசிய விண்வெளி நிர்வாகம் தியான்வென் 1 மார்ஸ் விண்களத்தை வடிவமைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் சீனாவின் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதுவரை செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பியது தொடர்பாக அழுத்தமான மவுனம் காத்துவந்த சீனா, கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்களது செவ்வாய் கிரகத்துக்கான விண்வெளிப் பயணம் மிக முக்கியமான காலகட்டத்தை எட்டியிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தது.



 

அந்த ஏழு நிமிடங்கள்.. திக்..திக்..திக்..

 

இந்திய மதிப்பில் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டது தியான்வென் மார்ஸ் 1 விண்கலம். அந்த விண்கலத்தில் ஜூரோங் ( Zhurong) ரோவர் பிரிந்து தரையிறங்கும் 7 நிமிடங்களை சீனா  "7 நிமிட பீதி" ("seven minutes of terror") எனப் பெயரிட்டிருந்தது. ஏனெனில் விண்கலத்திலிருந்து ரோவர் பிரிந்து செவ்வாய் கிரகத்தின் தரையில் இறங்கி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நேரமானது செவ்வாயிலிருந்து பூமிக்கு ரேடியோ சமிக்ஞைகள் வந்து சேரும் நேரத்தைவிட மிகமிக வேகமாக நடந்து முடிந்துவிடக் கூடியது. ஆகையால் அந்த 7 நிமிடங்களை சீனா பீதியுடனேயே எதிர்நோக்கியிருந்தது. ஜூராங்க் ரோவரை சுமந்து கொண்டிருந்த லேண்டர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்த செவ்வாய் கிரகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள உடோபியா பிளானிடியா என்ற இடத்தில் மிகத் துல்லியமாகத் தரையிறங்கியது.

240 கிலோ எடையில் 6 சக்கரங்களுடன் கூடிய ரோவர் ஜூராங், செவ்வாய் கிரகத்திலிருந்து பாறை மாதிரிகளை சேர்த்தெடுக்கும். 3 மாதங்களுக்கு செவ்வாய் கிரகத்தில் அதன் நிலப்பரப்பு குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஜூராங், பல்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுப்பதோடு செவ்வாயின் பூகோளம் குறித்தும் தகவல்களைத் திரட்டும். ஜூராங் என்பது சீன புராணங்களில் நெருப்புக் கடவுளைக் குறிக்கும் பெயராகும்.



 

அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து சீனா..

 

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து சீனா வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது செவ்வாயில் பெர்சிவெரன்ஸ் என்ற ரோவரை நிலைநிறுத்தியது. அந்த ரோவர் இதுநாள் வரை வெற்றிகரமாக செவ்வாயில் தகவல் திரட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனாவும் தனது ரோவரை செவ்வாயில் நிலைநிறுத்தி விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா வரிசையில் தன்னாலும் சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது.

கடந்த  2016ல் செவ்வாயில் ரோவரை இறக்கும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யாவின் ஒருங்கிணைந்த முயற்சி தோல்வியடைந்தது. ஸ்கியாபெரேலி (Schiaparelli ) என்ற விண்கலத்தின் ரோவர் தரையிறங்கும் போதே வெடித்துச் செயலிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.