செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்:


நாளுக்கு நாள் பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுகாதாரம், நிதி, சில்லறை வணிகம் மற்றும் போக்குவரத்து போன்ற தொழில்களில் வழக்கமான பணிகளை தானியக்கமாக்குவதற்கும், முடிவெடுப்பதை மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தேடுபொறி துறையில் முன்னணியில் உள்ள கூகுளுக்கு சவால் விடும் வகையில், Open AI எனும் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் சாட்ஜிபிடி எனும் சாட்பாட் தொழில்நுட்பத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இது பயனாளர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது.


சாட்ஜிபிடி செயல்பாடு என்ன?


சாட்ஜிபிடி(ChatGPT) என்பது மனிதர்களை போன்று பதில்களை உருவாக்கப் பயிற்சியளிக்கப்பட்ட ஒரு பெரிய அளவிலான மொழி உருவாக்க மாதிரியாகும். கேள்வி பதில், மொழிபெயர்ப்பு மற்றும் உரை சுருக்கம் போன்ற பல்வேறு இயற்கை மொழி செயலாக்கப் பணிகளை எளிமையாக்கும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. GPT ஆனது சரியான மற்றும் சூழலுக்கு ஏற்ற உரையை உருவாக்கும் திறனுக்காக வாடிக்கையாளர்களால் பாராட்டப்படுகிறது. இதனால் தான் அறிமுகமான இரண்டே மாதங்களில், சாட்ஜிபிடி 10 கோடி பயனாளர்களை பெற்றுள்ளது. ஆனால் அது ஒருதரப்புக்கு ஆதரவான அல்லது மோசமான பதில்களை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது.


”பார்ட்”(Bard) செயல்பாடு என்ன?


இந்நிலையில் தான் சாட்ஜிபிடி செயலிக்கு நேரடி போட்டியாக, கூகுள் நிறுவனம் ”பார்ட்” தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மனிதனின் ஆழமான அறிவாற்றல் உடன், கூகுள் பன்மொழிகளில் தன்னகத்தே கொண்டுள்ள வலிமை, புத்திசாலித்தனம் மற்றும் கண்டுபிடிப்பு அகியவற்றை ஒன்றிணைக்கும் நோக்கில் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. அசல் மற்றும் துல்லியமான பதில்களை வழங்க, இணையத்தில் கிடைக்கும் ஏராளமான தரவுகளை பார்ட் பயன்படுத்தும். தற்போது சோதனை முயற்சியில் பயன்படுத்தப்பட்டு வரும் ”பார்ட்” தொழில்நுட்பம்  வரும் வாரங்களில் பொதுமக்களின் பயன்பட்டிற்கு வர உள்ளது.




மேலும் படிக்க Google Bard Chatbot: எனக்காடா எண்ட் கார்ட் போடுறீங்க! சாட் ஜிபிடிக்கு நேரடியாக சவால் விடும் கூகுளின் ”பார்ட்”




சாட்ஜிபிடி Vs பார்ட்



  • Chat GPT ஆனது 2021ம் ஆண்டு வரையிலான நிகழ்வுகளை மட்டுமே உள்ளடக்கமாக பெற்றுள்ளது.  அதேநேரம், பார்ட் இணையத்தில் ஏற்கனவே உள்ள தரவு மற்றும் ஆதாரங்களில் இருந்து தகவல்களை பெற்றுக்கொள்கிறது. அதோடு, சமீபத்திய தேதிக்கான அணுகலையும் பெறுவதன் மூலம்,  புதுப்புது தகவல்களையும் கூகுளின் பார்ட் தொழில்நுட்பத்தால் எளிதில் வழங்க முடியும்

  • மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பின்புலத்தை கொண்டுள்ள சாட்ஜிபிடியை காட்டிலும், கூகுளின் தேடுபொறியுடன் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் பல தரவுகளுக்கான அணுகலைக் கொண்டிருக்கும் ”பார்ட்” மேம்பட்டதாக கருதப்படுகிறது

  • Chat GPT ஆனது சில தவறான மற்றும் போலியான தகவல்களை வழங்க வாய்ப்புள்ளது, Google இன் Bard AI பயனர்களுக்கு மிகவும் துல்லியமான தரவை வழங்கும் என்று நம்பப்படுகிறது.

  • கூகுளின் வசமுள்ள வலிமையான தரவு சேகரிப்பு மூலம் அணுகக்கூடிய தகவலின் ஆழம் மற்றும் வரம்பு ஆகியவற்றின் அடிப்படையில், சாட்ஜிபிடியை காட்டிலும் பார்ட் தொழில்நுட்பம் அதிக நம்பகத்தன்மையை கொண்டுள்ளது.

  • கடினமான விடயங்களையும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பார்ட் வழங்கும். குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடையேயும் அறிவாற்றலை வளர்ப்பதையே இந்த தொழில்நுட்பம் இலக்காக கொண்டுள்ளது. ஆனால், சாட்ஜிபிடியோ எழுப்பப்படும் கேள்விக்கு மட்டுமே பதிலளிக்கும் திறன் கொண்டுள்ளது.