தங்களது புதிய நிபந்தனைகளை அமல்படுத்த, virtual private network என்று அழைக்கப்படும் மெய்நிகர் தனியார் பிணையம்  அல்லது விபிஎன் சேவை நிறுவனங்களுக்கு மேலும் 3 மாதகாலம் அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது


புதிய விதிமுறை:


The Indian Computer Emergency Response Team (சிஇஆர்டி)யானது இந்தியாவில் இயங்கும் மெய்நிகர் தனியார் பிணைய சேவையை வழங்கும் நிறுவனங்கள், புதிய விதிமுறைகளை மேலும் 3 மாதங்களுக்கு பின்பற்ற ஒப்புதல் வழங்கியுள்ளது. க்ளவுட் சேவை மற்றும் டேட்டா செண்ட்டர்களுடன் இயங்கும் விபிஎன் சேவை வழங்குநர்கள் அவர்களது வாடிக்கையாளர்களின் பெயர், இமெஇயில் ஐடி, தொலைபேசி எண் மற்றும் ஐபி முகவரி ஆகியவற்றை ஐந்து ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும் என்றும், அரசுக்குத் தேவைப்படும்போது அதை கேட்கும்பட்சத்தில் கொடுக்க வேண்டும் என்று புதிய விதிமுறை ஒன்றை கடந்த ஏப்ரலில் மத்திய அரசு வகுத்தது. இந்த விதிமுறைகள் ஜூன் 27 முதல் அமலுக்கு வருவதாக அறிவித்திருந்தது. தற்போது சிஇஆர்டி வழங்கியுள்ள பரிந்துரையின்படி இந்த விதியானது செப்டம்பர் 25ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




கூடுதல் அவகாசம் வழங்க காரணம்:


டேட்டா செண்ட்டர்கள், மெய்நிகர் தனியார் சர்வர் வழங்குபவர்கள், க்ளவுட் சேவை வழங்குபவர்கள் மற்றும் விபிஎன் சேவை வழங்குபவர்கள் தங்கள் சேவையைப் பெறும் பயனாளர்களின் பெயர்கள் அவர்களது சரிபார்க்கப்பட்ட முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை சேமிப்பது மற்றும் பராமரிப்பது உள்ளிட்டவற்றிற்கான அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணங்களுக்காக 3 மாதம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.


அதே நேரத்தில் சைபர் ஏஜென்சியானது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏப்ரல் 28ம் தேதி அறிவித்த இணைய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படுவதற்கான கடைசி தேதியை செப்டம்பர் 25ம் தேதிக்கு நீட்டித்துள்ளது. இந்த மாற்றமானது, சுமார் 22 இணைய பாதுகாப்பு நிபுணர்கள் இணைந்து, “ஏப்ரலில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய புதிய வழிமுறைகளை அமல்படுத்துவதை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்வதாக கடந்த திங்கள் கிழமையன்று சிஆர்இடி  மற்றும் மத்திய தகவல் தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியதையடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.




நிபுணர்கள் கடிதம்:


மேலும், மத்திய அரசின் புதிய விதிமுறைகள் இணையப் பாதுகாப்பு மற்றும் பயனாளர்களின் தனியுரிமையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், பங்குதாரர்களின் கருத்துக்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த பொது ஆலோசனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியிருந்தனர். இதனையடுத்து, விபிஎன் சேவை வழங்குபவர்களுக்கு வழங்கப்பட்ட காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது.


புதிய விதிமுறைகளை விபிஎன் சேவை வழங்குபவர்களிடம் மத்திய அரசு அமல்படுத்த வலியுறுத்திய போது, பயனாளர்களின் தரவுகளை சேமித்துவைப்பது என்பது தங்களது சேவைக்கும், பயனாளர் தனியுரிமை பாதுகாப்பிற்கு முரண்பாடாக உள்ளது என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்தன. விபிஎன் சேவை வழங்கும் நிறுவனங்களான எக்ஸ்ப்ரஸ் விபிஎன், நார்ட் விபிஎன் மற்றும் சர்ஃப் ஷார்க் விபிஎன் ஆகிய நிறுவனங்கள் தங்களது சர்வர்களை இந்தியாவில் இருந்து நீக்கிவிடுவோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.