வளர்ச்சிக்கான அத்தனை அடிப்படை அம்சங்களும் இருந்தும், தனியார் நிறுவனங்களுக்கு இணையாக வளர முடியாமல் தவித்து வருகிறது மத்திய அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல். தனியார் நிறுவனங்கள் 4ஜி சேவையை கடந்து 5ஜி சேவைக்கான பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில், தற்போது தான் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்குவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் இந்நிறுவனத்திற்கான கட்டமைப்பு வலுவாக உள்ள சூழலில், அதை மேம்படுத்துவதன் மூலம், கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் நிறுவனங்களுக்கு பதிலாக,  பொதுமக்களுக்கு மலிவு விலையிலேயே தொலைதொடர்பு சேவையை அரசால் வழங்க முடியும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 


2024ல் 5ஜி சேவை:


இந்ந சூழலில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அஷ்வினி வைஷ்னவ்,  2024 ஆம் ஆண்டில் தனது சொந்த 5G டெலிகாம் சேவையை மக்களின் பயன்பாட்டுக்கு பிஎஸ்என்எல் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறினார். முன்னதாக நடப்பாண்டிலேயே பிஎஸ்என்எல் 5ஜி சேவை தொடங்கும் என அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது அந்த திட்டம் அடுத்த ஆண்டு வரை தாமதமாகியுள்ளது.


உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 4ஜி சேவை:


பிஎஸ்என்எல் நிர்வாகம் ஏற்கனவே TCS மற்றும் C-DOT ஆகிய இரு நிறுவனங்களுடன் சேர்ந்து மிகப்பெரிய முதலீட்டில்  4G நெட்வொர்க்கை உருவாக்குவதற்கான பணிகளை செய்து வருகிறது.  இதன் மூலம், பிஎஸ்என்எல் நடப்பாண்டு தொடக்கத்திலேயே முழுமையான உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4ஜி சேவையை நாடு முழுவதும் வழங்குவதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சுமார் 18 முதல் 24 மாதங்கள் ஆகும் என கருதப்படுகிறது. 4G சேவை இருப்பதால், தொலைத்தொடர்பு நிறுவனம் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களின் பாதையை நோக்கி செல்ல முடியும் என கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, ஒரு வருடத்திலேயே பிஎஸ்என்எல்லின் 4ஜி தொழில்நுட்பம் 5ஜிக்கு மேம்படுத்தப்படும் என, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.


ஒடிஷாவில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடி தலைமையிலான அரசு டெலிகாம் துறை சார்ந்து மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்தும் அவர் பேசி இருந்தார். அப்போது அவருடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனிருந்தார்.


5ஜி அலைக்கற்றை:


முன்னதாக, இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. படிப்படியாக பல்வேறு மாநிலங்களில் தனியார் நிறுவனங்களால் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, மத்திய அரசு ஏலம் விட்ட 5ஜி அலைக்கற்றைகள் ரூ. 1,50,173 கோடிக்கு விற்பனையானது. இதில் அதானி டேட்டா நெட் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் 400 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையையும்,  பார்த்தி ஏர்டெல் லிமிடெட் நிறுவனம் 19,867.8 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையையும் பெற்றது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் 24,740 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையையும்,  வோடபோன் ஐடியா லிமிடெட் 6,228 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையையும் ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.