இந்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், தன்னுடைய சின்னத்தை (லோகோ) மாற்றி அமைத்துள்ளது. இதில் நீல வண்ணத்தில் இருந்த லோகோ, காவி நிறத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. அத்துடன், பாதுகாப்பு, மலிவு மற்றும் நம்பகத்தன்மை (security, affordability and reliability ) என்ற வாசகங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
அதேபோல BSNL சின்னத்துடன் கூடிய Connecting India என்னும் வாசகம் Connecting Bharat என்று மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் 7 புதிய சேவைகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதை மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, மத்திய இணை அமைச்சர், துறை செயலாளர் உள்ளிட்டோர் இணைந்து திறந்து வைத்தனர்.
என்னென்ன சேவைகள்?
இந்த சேவையில் முதலாவதாக, ஸ்பாம் தொடர்புகள் இல்லாத வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முறைகேடு, மோசடி அழைப்புகள் வடிகட்டப்படும். அதேபோல, பிஎஸ்என்எல் வைஃபை ரோமிங், பிஎஸ்என்எல் ஐஎஃப்டிவி ஆகிய வசதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.
பிஎஸ்என்எல் வைஃபை ரோமிங் வசதி எஃப்டிடிஎச் (fiber-to-the-home) வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை வழங்குகிறது. எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல், இந்த வசதி வழங்கப்பட உள்ளது. அதேபோல, fiber-based intranet தொலைக்காட்சி சேவையும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் 500 லைவ் சேனல்களைக் கண்டுகளிக்க முடியும். எனினும் இது பிராட்பேண்ட் டேட்டாவை எடுத்துக்கொள்ளாது.
நெட்வொர்க் இல்லாதபோதும் யுபிஐ பேமெண்ட்
direct-to-device வசதி மூலம், தொலைத்தொடர்பு வசதி உருவாக்கப்படும். இந்த சேவை, நெட்வொர்க் இல்லாதபோதும் குறுஞ்செய்தி அனுப்பவும் யுபிஐ பேமெண்ட் செய்யவும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும். அதேபோல இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்களுக்கான முதல் 5 ஜி நெட்வொர்க்கையும் பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.