தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவையை வழங்க ஆயத்தமாகி வரும் நேரத்தில், அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை இந்தியா முழுவதுமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் எப்போது 4ஜி சேவையை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செலவுகள், வருமானம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மக்களவையில் கேள்விகள் எழுப்பட்டது. இதற்கு மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுனிஷ் சவுகான் பதிலளித்தார். அதில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். அதேபோல் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களையும் விலக்கும் திட்டம் எதுவும் இல்லை என குறிப்பிட்டார். இந்நிலையில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை வெளியிடுவதற்கான திட்டம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சவால்கள் குறித்து பிடிஐ அறிக்கையில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.



பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவைகளை செப்டம்பர் 2022 க்குள் இந்தியா முழுவதும் செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுக்கு. அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் நாடு முழுவதும் முழுமையாக 4ஜி சேவைகளை வழங்கினால் செயல்பாட்டின் முதல் ஆண்டில் சுமார் 900 கோடி ரூபாய் வரை வருவாயை அதிகரிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களாக அரசு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குமான மறுமலர்ச்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் 4ஜி சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உள்ளிட்டவைகளும் அடங்கும். அதேபோல் இந்த திட்டத்திற்கான நிதிக்கு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பிஎஸ்என்எல் நிறுவனம் பிற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை சமாளிக்க சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்தாலும், முற்றிலும் 4ஜி என்ற சேவை இல்லாத காரணத்தால் நிறுவனம் சந்தையில் முன்னேற திக்குமுக்காடி வருகிறது. பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்க தாமதமான முக்கிய காரணம் அரசு நிறுவனங்களுக்கு உள்நாட்டு உற்பத்தியை தேர்வு செய்யுமாறு டிராய் அறிவுறுத்தியதே ஆகும் என மறுபுறம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளுக்கு வெளிநாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த நிறுவனம் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் குறித்த விவாதம் அரசு தரப்பில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தாலும் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்றே பதிலே வருகிறது.






பிஎஸ்என்எல் சோதனைக் கட்டமாக 4ஜி சேவைகளை ஆங்காங்கே தொடங்கியிருந்தாலும் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முழுமையாக தொடங்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி இருப்பது பிஎஸ்என்எல் பிரியர்களை சற்று ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும் என்றே கூறலாம். ஏற்கனவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்த விலை உயர்வுக்கு பலரும் மீம்ஸ்கள் மூலம் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர் பிஎஸ்என்எல்-ஐ நோக்கி செல்வது நல்லது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.


அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து மீம்ஸ்களும் கருத்துகளும் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் சிலர் பிஎஸ்என்எல் இணைய வேகத்தை நன்றாக வழங்கினால் சிறப்பாக இருக்கும் என கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் தெரிவித்த சில மீம்ஸ்களை முழுமையாக காட்டப்படுகின்றன. பாரதி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரித்த பின்னர், இதே போன்ற அறிவிப்பை இப்போது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமும் அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் கட்டண உயர்வை அறிவித்த பின்னர், அதன் பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. இருப்பினும், தொலைத்தொடர்பு நிறுவனம், ப்ரீபெய்ட் திட்டங்களை தொழில்துறையில் மலிவானதாக வைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது பிஎஸ்என்எல் அறிவித்த அறிவிப்பின் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.