ட்ரோன்களின் பயன்பாடு தொடர்பாக மத்திய அரசு ஒரு புதிய வரைவு விதிகளை அண்மையில் வெளியிட்டது. அதில் சரக்கு விநியோகத்திற்காக ட்ரோன் வழித்தடங்கள் உருவாக்கப்படும். மேலும் வணிகத்திற்கு இசைவான ஒழுங்குமுறைக்காக ட்ரோன் ஊக்குவிப்பு கவுன்சில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் விரைவில் இந்தியாவில் ட்ரோன்கள் வணிக ரீதியில் பயன்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. 


இந்நிலையில் அந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற சோதனை முயற்சி அமைந்துள்ளது. அதன்படி மத்திய அரசின் உடான் திட்டத்தின் மூலம் த்ரோட்டில் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மருந்து விநியோகத்திற்கு ட்ரோன்களை பயன்படுத்தும் சோதனை முயற்சியை நேற்று மேற்கொண்டது. இந்த முயற்சியில் இரண்டு வகையான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. 




மெட்காப்டர்-x4 மற்றும் மெட்காப்டர்-x8 ஆகிய இரண்டு வகை ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. இவை இரண்டும் Beyond visual line of sight(BLVOS) என்ற முறையில் சோதனை முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. பெங்களூரு மாநகருக்கு  வெளியே அமைந்துள்ள பகுதியில் இந்தச் சோதனை நடைபெற்றது. இதில் 2 கிலோ வரை எடை கொண்ட மருந்து பொருட்களை ட்ரோன்கள் எடுத்து செல்லும் வகையில் பரிசோதிக்கப்பட்டது. அத்துடன் 2 முதல் 7 கிலோ மீட்டர் தூரம் வரை ட்ரோன் மூலம் இவை எடுத்து செல்லப்பட்டது. இந்த சோதனையில் சராசரியாக 3.5 கிலோ மீட்டர் தூரத்தை மருந்து பொருட்களுடன் ட்ரோன்கள் 5-7 நிமிடங்களில் கடந்தது கண்டறியப்பட்டுள்ளது. 


மேலும் மருந்து பொருட்களை கையில் கொடுப்பது போன்றும், அதை கீழே தரையிரக்குவது போன்றும் சோதிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதன் மூலம் சரியான சாலை வசதி இல்லாத இடத்தில் வேகமாக மருத்துங்களை எளிதாக கொடுக்க ஒரு புதிய வழி கிடைத்துள்ளது. மேலும் பேரிடர் காலங்களில் அவசர உதவி பொருட்களை ட்ரோன்கள் மூலம் அனுப்பும் வசதியும் கிடைக்கும். இவை தவிர மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களிலும் இந்த ட்ரோன்களை பயன்படுத்த முடியும். ஆகவே இந்த தொழில்நுட்பம் வணிக ரீதியில் வெற்றி அடையும் பட்சத்தில் பெரியளவில் பயன்கள் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் போது எளிதாக வாடிக்கையாளர்களை சென்று அடையும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த ட்ரோன்கள் வணிக ரீதியில் பயன்படுத்தப்ப்பட்டால் அதனால் விளையும் நல்ல பயன்கள் கிடைக்கும். அமேசான் இ-வர்த்தக் நிறுவனம் ஏற்கெனவே அமெரிக்காவில் ட்ரோன்கள் மூலம் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வருகிறது. அவை 2.25 கிலோ வரையிலான பொருட்களை ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ஆன்லைன் வகுப்புகளுக்கு டேப் வாங்குறீங்களா? - இதோ உங்களுக்கான பரிந்துரைகள்!