" பப்ஜி" விளையாட்டுக்கு ரசிகர்கள் ஏராளம்.குறிப்பா இந்தியாவுல இந்த விளையாட்டைகொண்டாடி தீர்த்தாங்க. பட்டித்தொட்டி எங்கும் பப்ஜியின் நீட்சியை பார்க்க முடிந்தது. ஆனால் சீனா, செயலிகள் மூலமாக  இந்தியாவை உளவு பார்ப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த அறிவிப்பு பப்ஜி ரசிகர்களுக்கு  மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தாலும் , அதன் பிறகு பப்ஜியின் இடத்தை பிடிக்க  CALL OF DUTY, FAUG-G  என நிறைய மொபைல் கேம் சந்தைப்படுத்தப்பட்டது. 




பல கேமிங் நிறுவனங்கள் இந்தியாவை குறிவைத்தே பல மொபைல்  கேமினை களமிறக்கினார்கள். ஆனால் அவை அனைத்தும் பப்ஜி  ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை, அந்த இடத்தை நிரப்பவும் இல்லை. இந்த நிலையில்தான், கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி க்ராஃப்டன் நிறுவனம் மீண்டும் பப்ஜியை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. இந்த அறிவிப்பு பப்ஜி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. 


அடுத்த அப்டேட்டாக பப்ஜி விளையாட்டின், இந்திய பதிப்பின் பெயரை "BATTLE GROUND INDIA” என அந்நிறுவனம் அறிமுகம் செய்தது .இது பப்ஜி வருகையை உறுதிப்படுத்துவதோடு அது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்து இருந்தது. எப்போது இந்தியாவுக்குள் பப்ஜி வரும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. பப்ஜி இந்தியாவுக்குள் அதிகாரபூர்வமாக நுழைந்தது. புதிய பெயருடன் முன்பதிவை தொடங்கியுள்ளது பப்ஜி. 




Battlegrounds Mobile India என்ற பெயரில் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் களம் இறங்கியுள்ளது. இப்போதைக்கு இந்த விளையாட்டுக்கு முன்பதிவை அந்நிறுவனம் கொண்டுள்ளது. அதாவது "Pre-register’’ முறையை கொண்டுவந்துள்ளது. வெறும் முன்பதிவு இல்லை. விளையாட்டு தொடர்பாக சிறப்பு பரிசுகளும் உண்டு என ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளது இந்த புதிய கேம்.


முன்பதிவு செய்வது எப்படி?


நேரடியாக பிளே ஸ்டோருக்கு சென்று Battlegrounds Mobile India என டைப் செய்து Pre-register செய்து கொள்ளலாம். அல்லது https://play.google.com/store/apps/details?id=com.pubg.imobile&hl=en&gl=IN என்ற பக்கத்தை க்ளிக் செய்து நேரடியாக சென்று முன் பதிவு செய்யலாம்.


ஏற்கெனவே தடை செய்யப்பட்டு மீண்டும் உள்ளே வர இருப்பதால் பப்ஜி இந்தியாவுக்கான பிரத்யேக தயாரிப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பயனர்களையும், இந்திய சந்தையையும் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க இந்தியாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வயது வரம்பு, எல்லை வரம்பு போன்ற பல கட்டுப்பாடுகள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை தடை செய்யப்பட்டதற்கான காரணிகள் நீக்கப்பட்டுள்ளதா, அல்லது பெயர் மட்டும் மாற்றப்பட்டு அதே கேம் பயன்பாட்டிற்கு வருகிறதா என்பதை பயன்பாட்டிற்கு வந்ததும் தெரிந்து கொள்ளலாம்.