முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றம் நிருபிக்கப்படாத நிலையில் நீண்டநாட்களாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் சிறையிலிருந்து நீண்டநாள் விடுப்பு வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையில், ‘சிறைகளில் பரவி வரும் கொரோனா கிருமி தொற்றும் மரணங்களும் மிகுந்த அச்சத்தை தருகிறது. ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அறிவுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என சிறைத்துறை மருத்துவர்கள் ஏற்கனவே அறிக்கை தந்துள்ளனர்.





மேலும் அறிவுக்கு தடைபட்டுள்ள மருத்துவத்தை தொடரவேண்டியுள்ளது. இதனை குறிப்பிட்டு நீண்ட விடுப்பு வழங்கக் கோரி 10ம்தேதி மனு அனுப்பியுள்ளேன். உச்ச நீதிமன்றம் 90 நாட்கள் விடுப்பு வழங்கலாமென 7ஆம்தேதி உத்தரவிட்டுள்ளது. எனவே மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அற்புதம்மாள்,’அறிவுக்கு ஏற்கனவே சிறுநீரகப் பிரச்னை இருக்கு. இதில் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவனது உடல்நிலை இன்னும் மோசமாகும். எனது 30 வருடப் போராட்டம் வீணாகிவிடும். என் மகனைக் காப்பாற்றனும். சிறைக்கு வெளியே இருக்கறவங்களுக்காவது மருத்துவ வசதி எல்லாம் கிடைக்குது. சிறைக்குள்ள எந்த வசதியும் கிடையாது.சாதாரண பெயிலில் விடுப்பு கிடைத்தால் கூடப் பரவாயில்லை.என் மகன் எங்களோட பத்திரமா இருக்காங்கற நிம்மதி இருக்கும்’ என மனக்கவலையுடன் தெரிவித்தார்.