நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்குள், இந்தியாவில் டேட்டா பயன்பாடு ஒட்டுமொத்தமாக கணக்கிடப்பட்டுள்ள வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் சுமார் 53 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 


வருடாந்திர மொபைல் பிராண்ட்பேண்ட் இண்டெக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த அறிக்கையில், கடந்த 2021ஆம் ஆண்டு, இந்தியாவில் சராசரியாக ஒரு பயனாளர் 17GB வரையிலான இணைய டேட்டா வசதியைப் பயன்படுத்துவதாகவும், இது கடந்த 2020ஆம் ஆண்டின் சராசரி கணக்கீட்டை விட சுமார் 26.6 சதவிகித உயர்வு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் கடந்த 5 ஆண்டுகளாக, இந்தியா முழுவதும் மொபைல் பிராண்ட்பேண்ட் பயனாளர்கள் இரட்டிப்பாக பெருகி, சுமார் 345 மில்லியன் பயனாளர்கள் என்ற எண்ணிக்கையில் இருந்து 765 மில்லியன் பயனாளர்கள் என உயர்ந்துள்ளது. 



கடந்த 2021ஆம் ஆண்டு, நாடு முழுவதும் 40 மில்லியனுக்கும் மேலான எண்ணிக்கையில் பயனாளர்கள் புதிதாக 4G சேவைகளைப் பயன்படத் தொடங்கியதோடு, கடந்த 2020ஆம் ஆண்டை விட சுமார் 31 சதவிகித உயர்வை அடைந்துள்ளது டேட்டா பயன்பாடு. 


மேலும், இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் தற்போதைய ஜென்-z தலைமுறையினர் சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் 8 மணி நேரங்கள் ஆன்லைனில் செலவிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பயனாளர்களுள் சுமார் 90 சதவிகிதப் பயனாளர்கள் ஆன்லைனில் தங்கள் பகுதிசார்ந்த மொழிகளில் உருவாக்கப்படும் படைப்புகளில் நேரம் செலவிடுகின்றனர். 


கடந்த 2021ஆம் ஆண்டு, இந்தியாவில் இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் எண்ணிக்கையைவிட அதிகபட்சமாக சுமார் 160 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்ஃபோன்களை இறக்குமதி செய்துள்ளதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. மேலும், இவற்றில் 30 மில்லியன் 5G ஸ்மார்ட்ஃபோன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 



கூடுதலாக நாடு முழுவதும் செயல்படும் நிலையில் 80 சதவிகித 4G ஸ்மார்ட்ஃபோன்கள் இருப்பதாகவும், செயல்படும் நிலையில் 5G கேட்ஜெட்களின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் இந்த அறிக்கை கூறியுள்ளது. 


மேலும், இந்த அறிக்கையில் அடுத்து புதிதாக 5G சேவைகளை அறிமுகப்படுத்துவதன்மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் டேட்டா பயன்பாட்டின் ஒட்டுமொத்தமாக கணக்கிடப்படும் வளர்ச்சி விகிதம் சுமார் 164 சதவிகிதம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 


நோக்கியா நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவரான சஞ்சய் மாலிக் இதுகுறித்து, `இந்தியாவின் மொபைல் பிராண்ட்பேண்ட் பயன்பாட்டை மேம்படுத்துவதில் 4G தொழில்நுட்பத்திற்குப் பெரிய பங்குண்டு. தற்போது 5G அலைக்கற்றைக்கான ஏலமும், அதன் சேவைகள் அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் இது இந்தியா முழுவதும் டிஜிட்டல் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள பிரிவுகள் நிரப்பப்படும் என நினைக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.