தொடங்கப்பட்ட சில நிமிடங்களுக்குள் இரு வர்க்க பின்புலத்தில் வாழும் இரு பெண்களின் கதையைச் சொல்லிவிடுகிறார் இயக்குநர். Face the Truth என்னும் நிகழ்ச்சியில் அரசியல்வாதிகளையும், முக்கியஸ்தர்களையும் கத்தி மீது நிற்கவைத்து சாதுர்யமான பதில்களை வாங்கும் பத்திரிகையாளர் மாயா மேனன், விவாகரத்துக்குப் பின் தனித்து வாழ்பவர் (வித்யா பாலன்). இன்னொருவர் ருக்சானா (ஷெஃபாலி ஷா) மாயா மேனனின் வீட்டு உதவியாளர் மட்டுமல்ல. மாயா மேனனின் மாற்றுத்திறனாளி மகனுக்கு தூண், தோழி என எல்லாமும்.


ருக்சானாவின் டீனேஜ் மகள், தன் பாய் ஃப்ரெண்டுடன் ட்ரைவ் சென்றபோது ஏற்பட்ட சிறு பிணக்கில் ஓடிவரும்போது, மாயா மேனனில் காரில் இடித்து விபத்துக்குள்ளாகிறார். லைவ் நிகழ்ச்சியில் தனக்கு முன்னால் நிற்கும் எவரையும் துருவியெடுத்து பதில் சொல்ல வைக்கும் துணிச்சல் கொண்ட மாயா, விபத்து நடந்த இடத்தைவிட்டு உடனே நகர்ந்து வீட்டை அடைகிறார். இதற்குப்பின்னான நிகழ்வுகளில் ருக்சானாவின் மகள் உயிருடன் இருக்கிறாரா, உண்மையைச் சந்திக்கும் மனநிலைக்கு மாயாவால் வரமுடிந்ததா, தன் மொத்த குடும்பத்தையும் பராமரிக்கும் மாயாதான் மகளின் துயரத்துக்குக் காரணம் என்னும் உண்மையை அறியும் ருக்சானா என்னவாகிறார் என்பதெல்லாம் நீங்கள் பார்க்கப்போகும் கதை. 



இறுதிவரை எங்கும் நிற்காமல் படபடவென பயணிக்கும் கதை, கதைசொல்லியாக மட்டுமில்லாமல், அழுத்தமான இரு பெண்களின் உளவியலை உங்களுக்குக் காட்டிக்கொண்டே இருக்கிறது.


உடுத்தும் உடையின் மீதும், உணர்வுகளின் மீதும், கேள்விகளால் துளைக்கப்படும் பெண் சமூகத்தின் பிரநிதிகளாக மாயாவும், ருக்சானாவும் அங்கங்கு கண்களால் பதில்கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.


வித்யா பாலனின் துமாரி சுலுவை இயக்கிய சுரேஷ் த்ரிவேணிக்கு, அவரது அசுர பலம் தெரிந்திருக்கிறது. குற்ற உணர்ச்சியில் ருக்சானா மீது பழிபோட்டு கோபப்படும்போதும், ’கேவலம் பணத்துக்காகவா உன் வாய்ப்பை இழந்துட்ட’ என்று ட்ரெய்னியாக வரும் ரோஹிணியிடம் கேட்கும்போதும், உண்மைகளை சொல்லி பாரம் குறைந்து நிற்கும் கணங்களிலும் வித்யா அசரவைக்கிறார். படம் பயணிக்கும் எல்லா நிமிடங்களையும் தோளில் சுமக்கிறார் வித்யா பாலன்.



ஷெஃபாலி தனது பாத்திரத்தின் மீதான எந்த நடுக்கமும், சந்தேகமும் இல்லாமல், கவனத்தை ஈர்க்கிறார். ஓடிடி ஷெஃபாலி என்னும் அற்புதமான நடிகரின் திறனை இந்திய ரசிகர்களுக்கு கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. டெல்லி க்ரைமில் அதிகாரியாக வாழும் ஷெஃபாலியின் ரோல், ஒரு சின்ன சாம்பிள் அதற்கு..


வர்க்க நிலையை விர்ச்சுவல் உலகில் வேறாக காட்டமுயற்சிக்கும், ருக்சானாவின் டீனேஜ் மகள் தொடங்கி, ‘உனக்கு நாங்க நிறைய செஞ்சிருக்கோம்’ என சொல்லிக்காட்டும் மாயாவின் அம்மா வரை, எல்லாவற்றிலும் டீடெய்ல்ஸை கோடுபோட்டு காட்டிய த்ரிவேணி ஸ்கோர் செய்கிறார். இங்கு எல்லாரும், எல்லாமும் சமமாகும்வரை, முகத்திரைகள் ஒழியாது என்பதும் கூட ஜல்சா சொல்லும் ஒன்லைன்தான்.


பாதியில் நிறுத்திவிடமுடியாத, தவிர்த்துவிடமுடியாத கதையும், விறுவிறுப்பும் ஜல்சாவை Must Watch லிஸ்டுக்குள் வைக்கிறது.